தான்சானியா சிறுமிக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை
புதன், 11 நவம்பர் 2009( 11:07 IST )
பிறக்கும் போதே முதுகு தண்டுவட எலும்பு முறிவுடன் பிறந்த ஆப்பிரிக்க நாடான தான்சானியாவை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கே.ஹெக்டே பேசுகையில், ஆப்பிரிக்க நாடான தான்சானியாவைச் சேர்ந்த மவுரீன் ரிச்சர்டு ஷிரிமா என்ற 6 வயது சிறுமிக்கு பிறவியிலேயே முதுகு தண்டின் இருபுறமும் உள்ள எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருந்தது. அதனால் அந்த குழந்தை முதுகு வலியால் அவதிப்பட்டது. அந்த சிறுமியை தான்சானியா நாட்டில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர்.
சிறுமியை பரிசோதித்து பார்த்ததில் முதுகு தண்டுவடத்தின் இருபுறமும் உள்ள எலும்பில் முறிவு ஏற்பட்டிருந்தது. அதோடு மட்டுமில்லாமல் சிறுமியின் தண்டுவடத்தில் நூல்போல கட்டி ஒன்று இருந்ததால் தண்டுவடம் தாழ்வாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை நவீனமுறையில் அறுவைச் சிகிச்சை மூலம் சரிசெய்ய திட்டமிட்டோம். எலும்பு முறிவுக்கு வழக்கமாக பயன்படுத்தும் கலப்பு உலோக ஸ்குரூக்களுக்குப் (மெட்டல் ஸ்குரூக்கள்) பதிலாக பின்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட பயோ-ரிசார்பபிள் ஸ்குரூக்களை பயன்படுத்த முடிவு செய்தோம்.
அதன்படி சிறுமி மவுரீன் ரிச்சர்டு ஷிரிமாவுக்கு கடந்த மாதம் 24-ந் தேதி நவீன அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது, சிறுமியின் முதுகுத் தண்டுவடத்தில் உடைந்த எலும்புகளை மற்றொரு எலும்பால் இணைத்து பயோ-ரிசார்பபிள் ஸ்குரூக்கள் மூலம் பொருத்தினோம். நூல்போல இருந்த கட்டியும் அகற்றப்பட்டது.
சிறுமிக்கு மூன்று மாதங்களில் எலும்பு முறிவு சரியாகிவிடும். 6 மாதங்களில் பயோ-ரிசார்பபிள் ஸ்குரூக்களை அவளது உடல் கிரகித்துக்கொள்ளும். இப்போது அவள் நலமுடன் இருக்கிறார். இந்த அறுவைச் சிகிச்சைக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகும். இந்த செலவை தான்சானியா நாட்டின் சுகாதாரத்துறை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
பொதுவாக அறுவை சிகிச்சையின்போது மெட்டல் ஸ்குரூக்களை பொருத்தினால் சில மாதங்களுக்கு பிறகு மற்றொரு அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்ற வேண்டும். பயோ-ரிசார்பபிள் ஸ்குரூக்களை அவ்வாறு அகற்ற வேண்டியதில்லை. உலகிலே முதன்முறையாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில்தான் பயோ-ரிசார்பபிள் ஸ்குரூக்கள் லைஸிஸ் தண்டுவடத்தை பொருத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளன. எதிர்காலத்தில் எம்.ஆர்.ஐ.ஸ்கேன் செய்யும்போது இந்த ஸ்குரூக்களால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.