மார்பகப் புற்று நோய்க்கான அல்புபாக்ஸ் (Albupax) என்ற மருந்தை விற்று வரும் ஹைதராபாதைச் சேர்ந்த நாட்கோ பார்மா நிறுவனம், தரக்குறைவான முறையில் அந்த மருந்தை தயாரித்து விற்று வருவதாக நாட்டின் முதன்மை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அந்த நிறுவனத்தின் மீது குற்ற நடவடிக்கை மெற்கொள்ளவிருக்கிறது.
அல்புபாக்ஸ் என்ற இந்த மருந்தில் கல்லீரலை சேதப்படுத்தும் உட்பொருட்கள் அடங்கியிருப்பதால் அதனை விற்பனை செய்யக்கூடாது என்று தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்த போது, மருந்து நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கு சிறைத் தண்டனையை பெற்றுத்தரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம், உற்பத்தி செய்யப்படும் எந்த ஒரு மருந்தையும் தர ஆய்வுக்குட்படுத்தி அதன் பிறகே விற்பனை உரிமையை அளிக்கிறது. இப்போது தரக்குறைவான மாரபகப் புற்று நோய் தடுப்பு மருந்தை விற்று வரும் நேட்கோ நிறுவனத்தின் உற்பத்தி உரிமம் ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இந்த புகார்களை அடுத்து நேட்கோ நிறுவனம் சந்தையில் உள்ள அனைத்து அல்புபாக்ஸ் மருந்தையும் விற்பனையிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் அப்ராக்சிஸ் என்ற நிறுவனத்தின் மருந்தான அப்ராக்சேன் (Abraxane) என்பதன் நேனோ தொழில் நுட்ப உற்பத்தி வடிவம்தான் இந்த அல்புபாக்ஸ் என்ற மார்பகப் புற்று நோய் தடுப்பு மருந்தாகும். இது கடந்த செப்டம்பர், 2008ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தது.
ஆனால் 2009ஆம் ஆண்டு அமெரிக்க நிறுவனமான அப்ராக்சிஸ், இந்த மருந்தின் பக்க விளைவுகளை பட்டியலிட்டு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை ஆணையத்திற்கு புகார் அனுப்பியது.
உடனேயே அல்புபாக்ஸின் மாதிரிகள் கொல்கட்டாவில் உள்ள மருந்து உட்பொருள் சோதனை மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அங்கு மருந்தின் 'என்டோடாக்சின்', 'குளொரோஃபார்ம்' அளவுகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் அந்த மருந்து பயன்படுத்த லாயக்கற்றது என்று தெரியவந்தது.
மூல மருந்தான அமெரிக்க நிறுவனத்தின் அப்ராக்சேன், அல்புபாக்சைக் காட்டிலும் குப்பி ஒன்றுக்கு ரூ.5000 விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மார்பகப் புற்று நோய்க்கு ஆளாகின்றனர். இந்த மருந்திற்கான சந்தை மதிப்பு இந்தியாவில் ரூ.200 கோடியாகும்.
ஆனால் இங்கு ஒன்றை நாம் கவனத்தில் கொள்வதும் நல்லது. ஒரு குப்பி ரூ.5,000த்திற்கும் அதிகமாக விலை வைத்து விற்கப்படும் மூல அமெரிக்க நிறுவனத்தின் மருந்து விற்பனை நேட்கோவின் மருந்தால் எந்த அளவிற்கு பாதிப்படைந்துள்ளது என்ற விவரம் தெரியவில்லை.
அமெரிக்க நிறுவனம் அளித்த புகாரின் பேரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது சந்தேகங்களை கிளப்புகிறது. குறைந்த விலையில் இந்த மருந்து கிடைத்து விடக்கூடாது என்ற அமெரிக்க நிறுவனத்தின் வர்த்தகப் போட்டியின் விளைவாகக் இந்த புகார் எழுப்பப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.
அப்ராக்சேன் என்பது புதிய மருந்தல்ல, மாறாக "டேக்சால்", "டேக்சோடியர்" என்று அமெரிக்காவில் பொதுவாக விற்பனை செய்யப்பட்டு வந்த மருந்தின் மூலப் பொருளான பேக்ளிடாக்செல் என்பதன் நேனோ துகள் தொழில் நுட்ப வடிவமே.
ஆனால் பேக்ளிடாசெல் என்ற அந்த மூலப்பொருள் சாதாரணமாக மருந்துகள் கரைவது போல் நீரில் கரையக் கூடியது அல்ல. இதனால் இதில் சில கரைப்பான்களை (solvents) சேர்க்கவேண்டியதாயிற்று. இதனால் பக்க விளைவுகள் கடுமையாக ஏற்பட்டு வந்தது.
இந்தப் பக்க விளைவு பிரச்சையைத தடுக்க மார்பகப் புற்று நோய் உள்ளவர்களுக்கு ஸ்டெராய்ட் உள்ளிட்ட மருந்துகளை பெரிய அளவுகளில் கீமோசிகிச்சைக்கு முன் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இருந்து வந்தது.
இந்தப் பிரச்சனையிலிருந்து காக்க கண்டு பிடிக்கப்பட்டதுதான் அப்ராக்சேன் என்ற இந்த மருந்து.
இது நேனோ துகள் தொழில் நுட்ப முறையில் தயாரிக்கப்படுவதால் உடலில் இயற்கையாக உள்ள புரதமான 'அல்புமின்' என்பதுடன் எளிதில் கரைந்து விடுகிறது. இதனால் அது நீரில் எளிதாக கரையக் கூடியதாக மாறி விடுகிறது.
இந்த புதிய ஊசி மருந்தினால், கீமோ தெரபியை 3 மணி நேரம் செய்ய வேண்டிய தேவையில்லாமல் போய் விடுகிறது. அரை மணி நேரம் செய்தாலே போதுமானது.
இந்த மருந்துதான் தற்போது நேட்கோ நிறுவனத்தால் அல்புபாக்ஸ் என்று குறைந்த விலையில், அதாவது அல்ப்ராக்சேனைக் காட்டிலும் குப்பி ஒன்றுக்கு ரூ.5000 விலை குறைவாக சந்தைக்கு வந்தது.
தற்போது இது கல்லீரலைச் சேதப்படுத்தும் என்று அமெரிக்க நிறுவனம் புகார் கிளப்பியுள்ளது.