தரமான மருந்துகள், குறைந்த விலையில் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் ராஜீவ் காந்தி மருந்து திட்டம் என்ற புதிய திட்டத்தை தொடங்க இருப்பதாக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒரே தரமான மருந்துகளின் விலையில் அதிக வித்தியாசம் உள்ளது. பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும், மற்ற நிறுவனங்களுக்கும் 3 முதல் 10 மடங்குக்கும் அதிகமாக மருந்து விலையில் வித்தியாசம் இருக்கிறது.
மக்களுக்கு தரமான மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதற்கும், குறைந்த விலையில் தரமான மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ராஜீவ் காந்தி மருந்து திட்டம் என்ற திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மருந்துகள் வாங்கும் மாநில அரசுகளின் மருத்துவத் துறைக்கு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற மாநில அரசு மருத்துவமனைகளுக்கு ஜெனரிக் மருந்துகள் வாங்க வேண்டும். அம்மருந்துகளையே அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.
இதனால் குறைந்த விலைக்கு தரமான மருந்துகளை அதிக அளவில் வாங்கி வினியோகிக்க முடியும். அதேபோல் தரமான மருந்துகளை தயாரித்து குறைந்த விலையில் விற்கும் நிறுவனங்களுக்கு ஊக்கமாகவும் அமையும்.
இத்திட்டம் மாதிரியாக தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தொடங்கப்படும். இதற்காக மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து தேவையான நிதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். பிரணாப் முகர்ஜியும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
|