பிறந்து 25 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு இதயத்தின் இடது பகுதியில் ஏற்பட்ட பாதிப்பிற்காக வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து பெங்களூரு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் காலின் ஜான் தலைமையிலான 4 மருத்துவர்கள் அடங்கிய குழு சுமார் 7 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை செய்து அந்த குழந்தைக்கு மறுவாழ்வு அளித்திருப்பதாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வெளியிட்ட் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
பிறக்கும் குழந்தைகளில் மிகவும் அரிதாக இதுபோன்ற ஹெச்.எல்.ஹெச்.எஸ் (Hypoplastic Left Heart Syndrome - HLHS) பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதயத்தில் இரத்தத்தை பம்ப் செய்யக்கூடிய இடது வென்ட்ரிக்கிள் இல்லாமல் அந்தக் குழந்தை பிறந்தது. இதனால் ரத்த ஓட்டம் பாதிப்புக்குள்ளாகும். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகக் கூடும் என்பதால், இந்த மிகவும் அரிதான அறுவை சிகிச்சையை டாக்டர்கள் மேற்கொண்டதாகவும், அந்த அறுவை சிகிச்சை வெற்றியடைந்து குழந்தை நலமுடன் இருப்பதாகவும் அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
அறுவை சிகிச்சை பற்றி குறிப்பிட்ட டாக்டர் காலின் ஜான், வளர்ந்து வரும் விழிப்புணர்வு மற்றும் தொழில்நுட்பம் காரணமாக இதுபோன்ற பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே அறிந்து, அந்தக் குழந்தையை காப்பாற்றியதாகக் கூறினார்.
நார்வுட்(Norwood procedure) முறையில் இந்த ஆபரேஷன் செய்யப்பட்டதாகவும் டாக்டர் தெரிவித்தார்.
|