தமிழகத்தில் ரூ.5 கோடியில் கர்ப்பப்பையில் உண்டாகும் நோய்களுக்காக சிகிச்சை அளிக்கும் பொருட்டு தமிழக முதலமைச்சரின் மகளிர் கர்ப்பப்பை பரிசோதனை மற்றும் சிறப்பு சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக சட்டசபையில் சுகாதாரத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பதில் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், வருமான வரம்பின்றி அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழக சட்டசபையில் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசுகையில், கடந்த ஆட்சிக்காலத்தில் (2005-2006) ரூ.1,487 கோடியாக இருந்த இத்துறையின் நிதி ஒதுக்கீடு, நடப்பு நிதியாண்டில் ரூ.3,391 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 1904 கோடி கூடுதலாகும்.
மேலும்,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாத வருமானம் ரூ.1999-க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் வருமான வரம்பின்றி, அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
ரூ.150 கோடியில் மத்திய அரசின் உதவியுடன் மதுரை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மேம்படுத்தப்படும்.
60 நகராட்சிகளில் நடப்பு நிதியாண்டில் ரூ.9 கோடி செலவில் நகர்ப்புற சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.
ரூ.2.28 கோடியில் தாய்மார்களுக்கு சிறந்த முறையில் கருத்தடை வளையம் பொருத்த செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
தொலைதூரத்தில் இருந்து பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு வரும் தாய்மார்கள் தங்கி பிரசவம் பார்த்து செல்ல நடப்பு ஆண்டில் 15 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.2.25 கோடி செலவில் காத்திருக்கும் அறைகள் கட்டப்படும்.
கிராமங்களில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்கள் எளிய முறையில் பதிவேடுகள் பராமரிக்கும் வண்ணம் சிறப்பாக செயல்படும் 5 மாவட்டங்களில் ரூ. 2 கோடி செலவில் கையடக்க கணினி வழங்கப்படும்.
ரூ.5 கோடியில் கர்ப்பப்பையில் உண்டாகும் நோய்களுக்காக சிகிச்சை அளிக்கும் பொருட்டு, முதல்-அமைச்சரின் "மகளிர் கர்ப்பப்பை பரிசோதனை மற்றும் சிறப்பு சிகிச்சை திட்டம்'' செயல்படுத்தப்படும்.
ஏழை கர்ப்பிணித் தாய்மார்களுக்கான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இரண்டு செவிலியர் கல்லூரிகள் மற்றும் 21 செவிலியர் பயிற்சி பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.153 கோடி செலவில் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும்.
மாவட்டம், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளில் 434 கூடுதல் சிறப்பு மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, ஏழை மக்களுக்கு சிறப்பு சிகிச்சை கிடைக்க வழிவகை செய்யப்படும்.
கர்ப்பிணி பெண்களின் ரத்த சோகையை சரி செய்யும் வகையில் ரூ.4.57 கோடி செலவில் இரும்புச்சத்து குழல் மாத்திரைகள் வழங்கப்படும்.
தமிழகத்தில் மலைப்பகுதி மற்றும் போக்குவரத்து வசதியின்றி இருக்கும் கிராமங்களில் உள்ளவர்களுக்கு அவசர காலங்களில் மருத்துவ சேவைகள் அளிப்பதற்காக முதல்கட்டமாக 2650 கிராம சுகாதார சேவகிகள் ஈடுபடுத்தப்படுவர். அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்ப ஊக்க தொகை வழங்க ரூ.5.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சிசு இறப்பு விகிதத்தை குறைக்க, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களில் ரூ.13.38 கோடி செலவில் சிறப்பு சிசு கவனிப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.
இளம் வயதில் கண்பார்வை குறைபாடுகளை களைய தொடங்கப்பட்ட டாக்டர் கலைஞர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின்கீழ் ரூ.5.35 கோடியில் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு இலவச கண்ணாடி வழங்கப்படும்.
தென் தமிழகத்தில் இருந்து மனநல சிகிச்சை தேவைப்படுவோர் சென்னைக்கு வரவேண்டி உள்ளது. அதனால் தேனியில் உள்ள என்.ஆர்.டீ. மருத்துவமனை, ரூ.2.1 கோடியில் தென்மண்டல மனநல மருத்துவ மனையாக மாற்றி அமைக்கப்படும்.
ரூ.10 கோடியில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சுத்தமான படுக்கை வசதிகள் மற்றும் அறுவை சிகிச்சை வசதிகளுக்காக 40 சுகாதார மாவட்டங்களில் நவீன உலர் சலவை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
ஏழை எளிய பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு "பள்ளி சிறார் இருதய பாதுகாப்பு திட்டத்தை'' முதல்-அமைச்சர் ஏற்படுத்தினார். இந்நிதியாண்டில் இத்திட்டம் ரூ.10 கோடியில் செயல்படுத்தப்படும்.
சித்த மருத்துவம் அயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவ சேவைகள் தற்போது 479 ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் 300 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.7.01 கோடியில் விரிவுபடுத்தப்படும்.
சர்க்கரை நோய் மற்றும் சீறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய நோயாளிகளை கருத்தில் கொண்டு, அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் கருவிகள் ரூ.5.5 கோடி செலவில் நிறுவப்படும்.
கோவில்பட்டி, வாலாஜா, மணப்பாறை, பத்மநாபபுரம், தென்காசி மற்றும் திருவண்ணாமாலை ஆகிய 6 அரசு தலைமை மருத்துவமனைகளில் தீவிர இருதய சிகிச்சை பிரிவு ரூ.1.21 கோடியில் தொடங்கப்படும். மருத்துவக் கல்லூரி இல்லாத அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு ரூ.1.3 கோடியில் டாப்ளருடன் கூடிய இ.சி.ஜி. கருவியும் வழங்கப்படும்.
திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.50 கோடியில் பட்ட மேற்படிப்புக்காக உள்கட்டமைப்பு வசதிகள் நடப்பு நிதியாண்டில் மேம்படுத்தப்படும்.
108 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்தால், அவசர கால மருத்துவ சிகிச்சைக்காகவும் முதலுதவிக்காகவும் நோயாளிகளை இலவசமாக ஆம்புலன்சில் கொண்டு செல்லும் திட்டத்துக்காக, இந்த ஆண்டு ரூ.55 கோடியில் 445 ஆம்புலன்ஸ்சுகள் இயக்கப்படும்.
60 வயதுக்கு மேலான பதிவு பெற்ற பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தை விரிவுபடுத்தி, 500 பதிவு பெற்ற ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி வைத்தியர்களுக்கும் ஓய்வூதியம் மாதம் ரூ.500 வீதம் இனி வழங்கப்படும்.
முதல் கட்டமாக 150 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.9 கோடியில் வாகனங்கள் வழங்கப்படும்.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை சேவைகள் கன்னியாகுமாரி, திருநெல்வேலி, மதுரை மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் கோவில்பட்டி, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் ரூ.53 கோடி செலவில் மைய அரசின் உதவியுடன் தொடங்கப்படும்.
ரூ.2.3 கோடியில் கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் சிறுநீரக மகளிர் நோயியல் துறை மேம்படுத்தப்படும்.
அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ரூ.2.35 கோடி செலவில் இந்த ஆண்டு பயனாளிகள் நலச் சங்கம் அமைக்கப்படும்.
மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் வட்ட மருத்துவமனைகளில் தமிழ்நாடு மருத்துவ பணி கழகத்தால் சி.டி.ஸ்கேன் நிறுவப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், கள்ளக்குறிச்சி, உசிலம்பட்டி, சிதம்பரம், தென்காசி ஆகிய மருத்துவமனைகளில் ரூ.5 கோடி செலவில் நிறுவப்படும்.
ரூ.4 கோடியில் அவசர சிகிச்சைகளை சிறப்பாக செய்ய தமிழகத்தில் உள்ள 40 மருத்துவமனைகளில் பிராணவாயு விநியோகிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் எளிய முறையில் துளையிட்டு செய்ய கூடிய ஆபரேட்டிவ் லேப்ராஸ்கோப் கருவி, ரூ.4.05 கோடியில் வழங்கப்படும்.
எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு `சிடி4' கண்டறிய கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல், விருதுநகர், கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், நாகை, ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் நீலகிரி ஆகிய 17 மையங்களுக்கு ரூ.4.42 கோடியில் சிடி4 இயந்திரம் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் நோய்களையும் குறைபாடுகளையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் பள்ளி சுகாதார திட்டம் தற்போது செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டு ராமநாதபுரம், காஞ்சி, திண்டுக்கல், கடலூர், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ரூ.4.1 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். |