பெரும்பாலான குழந்தைகளுக்கு உடல் எடை மிகச்சிறிய வயதிலேயே அதிகரிப்பது, உலக அளவில் கவலைப்படக் கூடிய ஒரு மருத்துவப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
குழந்தைகள் இடைவிடாமல் - தீவிரமாக வீடியோ கேம்களை விளையாடுவதால், உடல் எடை அதிகரிப்பில் இருந்து விடுபடுவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
வீடுகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பணியிடங்களில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப மாற்றங்கள், வாழ்க்கைக்கு வசதிகளை அளித்தாலும், உடல்ரீதியான உழைப்புகளை (Physical activity) குறைத்து வருவது மறுக்க முடியாத உண்மை.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், குழந்தைகள் தீவிரமாகவும், வேகமாகவும் வீடியோ கேம்களை விளையாடுவதால் அவர்களின் உடலில் கலோரி அளவு குறைவதாக தெரிய வந்துள்ளது.
6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அவர்களின் இதயத் துடிப்பும், உடலின் கலோரி அளவும் கணக்கிடப்பட்டது. தீவிரமாக வீடியோ கேம் விளையாடுமாறும், மிகவும் மெதுவாக வீடியோ கேம் விளையாடுமாறும் குழந்தைகளிடம் இரு பிரிவாக கேட்டுக் கொள்ளப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு வீடியோ கேம்களுக்கு இடையேயும் 5 நிமிட ஓய்வும் அளிக்கப்பட்டது.
தீவிர வீடியோ கேம் விளையாடிவர்களுக்கு நிமிடத்திற்கு 98 விழுக்காடு அளவு கலோரி எரிவதும், சாதாரணமாக (மெதுவாக) விளையாடிய குழந்தைகளுக்கு நிமிடத்திற்கு 39 விழுக்காடு அளவு கலோரி எரிவதும் கண்டறியப்பட்டது.
இதன்மூலம் தீவிரமாக வீடியோ கேம் விளையாடும் குழந்தைகள், உடல் எடை அதிகரிப்புப் பிரச்சினையில் இருந்து தப்பி விடுவது தெரிய வந்துள்ளது.
தவிர, அதுபோன்ற குழந்தைகளின் இதயத் துடிப்பும் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே குழந்தைகளே அதிவேகமான வீடியோ கேம் விளையாட்டுகளைத் தேர்வு செய்து விளையாடுங்கள்!
பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை வீடியோ கேம் விளையாட அனுமதியுங்கள்!
|