நமக்கு இருப்பதை இல்லாதோர்க்கு கொடுத்து உதவும் செயலை தானம் என்று சொல்கிறோம். எந்த பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு நாம் எதைக் கொடுத்தாலும் அது தானம்தான்.
ஒருவரது பசியைப் போக்குவது அன்னதானம். ஒருவருக்கு பார்வை கொடுப்பது கண் தானம். ஆனால் ஒருவருக்கு உயிரையேக் கொடுக்கலாம் ஒரு தானத்தின் மூலமாக. ஆனால் அதற்காக நாம் நமது உயிரைக் கொடுக்க வேண்டாம். ரத்தத்தைக் கொடுத்தால் போதும்.
சரி ரத்த தானம் செய்வது பற்றி எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது. அது பற்றிய பயம், அறியாமை போன்ற எவ்வளவோ விஷயங்கள் மக்களிடம் உள்ளன. அவற்றை களைந்து உயிரைக் காக்கும் ரத்த தானத்தை அளிக்க முன் வர வேண்டும்.
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாம். ஆனால் ரத்த தானம் அளிக்க விரும்புவோரது உடல் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
நல்ல ஆரோக்கியமாக இருக்கும் எந்த நபரும் ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்வதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
3 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ரத்த தானம் செய்ய முடியும்!
சாதாரண எடையுள்ள ஒவ்வொரு மனித உடம்பிலும் ஐந்து முதல் ஆறு லிட்டர் ரத்தம் இருக்கும். அதில் இருந்து வெறும் 300 முதல் 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே ரத்த தானத்தின் போது எடுக்கப்படும்.
தானமாக அளித்த ரத்த அளவை நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும்.
ரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும்.
ரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
உடலில் இருந்து ரத்தம் எடுக்க 5 அல்லது 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் ரத்த தானம் அளித்த பிறகு 10, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கச் சொல்லி பிறகுதான் அங்கிருந்து அனுப்புவார்கள். எனவே மொத்தமாகவே ரத்த தானம் அளிக்க 30 நிமிடங்கள் போதும்.
ரத்த தானம் அளித்த பிறகும் கூட அவரவர் தங்களது அன்றாட வேலைகளில் எப்போதும் போல் ஈடுபடலாம். எந்த சிக்கலும் இருக்காது.
ரத்த தானம் செய்வதற்கு முன்பு தனக்கு ரத்த சோகை, ரத்த அழுத்தம் போன்ற எந்த நோயும் இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழை அளிக்க வேண்டும்.
ரத்த தானம் செய்யும் நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்கக் கூடாது. குடித்திருக்கவும் கூடாது.
ரத்த தானம் செய்ய விரும்புவர்களுக்கு சர்க்கரை நோய், டிபி, எய்ட்ஸ் போன்று ரத்தத்தின் மூலம் பரவக்கூடிய நோய்கள் இருக்கக் கூடாது.
ரத்த தானம் அளிக்க விரும்புபவருக்கு கடந்த 3 ஆண்டுகளில் மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருக்கக் கூடாது.
|