பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மூன்றாவது பன்னாட்டு பாலியல் மருத்துவ வல்லுநர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள ஆகாஷ் கரு வளர்ச்சி மையம், பாலியல் தொடர்பான மூன்றாவது பன்னாட்டு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த 16,17 தேதிகளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 400 மருத்துவ வல்லுநர்களும்,30-ற்கும் மேற்பட்ட அயல்நாடுகளை சேர்ந்த மருத்துவ வல்லுநர்களும் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் பங்கேற்ற மருத்துவர்கள் அனைவரும் பள்ளிகளில் சமூகவியல், இயற்பியல், வரலாறு, அறிவியல் போன்ற பாடங்களைப் போல பாலியல் கல்வியையும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பெற்றோர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
பாலியல் கல்வியை கற்றுக் கொடுப்பதற்கு பள்ளிக் கூடம்தான் சரியான இடம் என்றும், மற்ற பாடங்களைப் போல பாலியல் கல்வியை கற்றுத் தருவதுடன், முறைகேடான பாலியல் உறவில் ஈடுபட்டால் வரும் நோய்கள் குறித்தும் மாணவர்களுக்கு போதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவில் பணியாற்றும் பாலியல் துறை வல்லுநர் அருள் கண்ணன் தெரிவித்து உள்ளார். பாலியல் உறவுகளை மோசமாக வெளிப்படுத்தும் இணையத் தளங்களை தடை செய்ய வேண்டும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர்.
பாலியல் உறவுகளை மோசமாக சித்தரிக்கும் செயல் பாலியல் கல்வியல்ல என்றும், இவை மனிதர்களை கொஞ்சம் கூட சிந்திக்க வைக்காமல் பல்வேறு வகையான பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டும் என்றும், எனவே அத்தகைய செயல்களை செய்யத் தூண்டுபவற்றை அழிக்க வேண்டும் எனவும் இந்திய பாலியல் துறை மருத்துவர்கள் கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் டி.காமராஜ் தெரிவித்து உள்ளார்.
மராட்டியம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பள்ளிகளில் பாலியல் கல்வியைப் போதிக்க அம்மாநில அரசுகள் தடை விதித்து உள்ளன. போதிக்கும் முறைகள் சரியல்ல என்று மாநில அரசுகள் குற்றம்சாட்டியுள்ளன. ஹெச்.ஐ.வி. பரவாமல் தடுக்க முயலும் மத்திய அரசால் கூட இந்த தடையை அகற்ற இயலவில்லை என்றும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டில் தற்போது ஹெச்.ஐ.வி. நோய்க்கிருமி தாக்கியவர்கள் 25 லட்சம் பேர் உள்ளனர். இது முந்தைய ஐ.நா. ஆய்வில் கூறப்பட்ட 57 லட்சம் பேரை விடக் குறைவுதான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளில் உள்ள ஹெச்.ஐ.வி. நோய்க்கிருமி தாக்கியவர்கள் விட இந்தியாவில் சற்று கூடுதலாக இந்நோய்க் கிருமி தாக்கியவர்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
|