உகாண்டாவை சேர்ந்த ஐந்து குழந்தைகளுக்கு அடுத்த மாதம் இந்தியாவில் இலவச இதய அறுவை சிகிசை அளிக்கப்பட உள்ளது.
இதற்கான அனைத்து செலவுகளையும் உகாண்டாவுக்கான இந்திய நல்லுறவு சங்கம் ஏற்கிறது. இதற்கான அறிவிப்பை இந்திய குடியரசு தினத்தன்று கம்பாலாவில் நடந்த விழாவில் சங்க தலைவர் நரேன் மேத்தா வெளியிட்டார்.
"இந்த அறுவை சிகிச்சை பெங்களூரு மருத்துவமனையில் மிக உயர்ந்த தரத்தில் நடைபெறும். இதற்காக பல்வேறு விண்ணப்பங்களை பெற்றுள்ளோம். அவற்றில் தேர்வு செய்யப்படும் ஐந்து குழந்தைகளுக்கான பயணச் செலவு, தங்கும் செலவு, சிகிச்சைக்கான கட்டணம், சிகிச்சைக்கு பிறகு ஆகும் செலவு அனைத்தும் சங்கமே ஏற்றுக்கொள்ளும். இதற்காக குழந்தைக்கு தலா 5 ஆயிரம் டாலர் வழங்கப்படுகிறது.
பரிசோதனை, சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் மருத்துவமனையில் உள்ளது. இங்கு இதயம், நரம்பு, சிறுநீரக மாற்று சிகிச்சை உட்பட பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்படும்" என்று நரேன் கூறினார்.
இவ்வாறு இந்த சங்கம் அதிகமானோருக்கு சிகிச்சை அளித்துள்ளது. கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட சிகிச்சைகான செலவில் இந்திய உயர்மட்ட ஆணையம் 2.5 லட்சம் டாலர் நிதியை அளித்துள்ளது.
இந்நிலையில், புகாண்டா மாகாண அமைச்சர் ரஜினி டெய்லர், "முலாகோ இருதய மருத்துவமனைக்கு அரசு போதிய நிதி அளிக்க வேண்டும். உகாண்டாவில் நூற்றுக்கணக்கான ஏழைகள் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சிகிச்சைக்கான செலவை ஏற்க முடியாது. அவர்களில் மிகச் சில குழந்தைகளுக்கு மட்டுமே அயல்நாடுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மனித உயிர்களை காப்பாற்ற உகாண்டா அரசு போதிய வசதிகளை மேம்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
|