நிலையற்ற காலநிலை மோசமான விளைவுகளை உடல்நலத்தில் ஏற்படுத்தும் என்று ஆஸ்ட்ரேலிய தேசிய பல்கலைக் கழக பேராசிரியர் மெக்மைக்கேல் எச்சரித்துள்ளார்.
நிலையற்ற காலநிலை மனித உடல்நலத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும், இதனைச் சீரமைக்க வலுவான சுற்றுச் சூழல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாதது என்று கூறியுள்ளார். அவ்வாறு செயல்படும் போது தான் மக்களைப் பாதுகாக்க இயலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதாரத்திற்கு உள்ள ஆபத்து எந்த வகையைச் சார்ந்ததோ, அதைப் போன்றது தான் காலநிலை மனிதனின் உடலுக்கு விளைவிக்கும் தீங்கும் என்று கூறியுள்ளார். நமது வாழ்க்கை ஆதார முறைகளை காலநிலை மாற்றம் சிதைக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி 25 விழுக்காடு நோய்கள் காற்று, நீர், நிலம், உணவு ஆகியவற்றின் மாசுபாட்டால் வருவதாகவும், இதனால் குறிப்பாக வயிற்றுப் போக்கு, மூச்சுவிடுதல் தொடர்பான தொற்று நோய்க் கிருமிகள் உடலைத் தாக்கும் நிலை உருவாவதாகவும், ஏற்கெனவே உள்ள உடல் குறைபாடுகளின் நிலை, அளவு, பருவ நிலை ஆகியவற்றையும் மாற்றும் தன்மைக் கொண்டது என்று கூறியுள்ளார்.
இதேநிலை நீடித்தால், 2080 ஆம் ஆண்டு 7 கோடி பேர் மலேரியா மண்டலத்தில் வாழும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். வளர்ந்த நாடுகளைவிட குறைந்த வருவாய் உள்ள மக்கள் அதிகம் வாழும் வளரும் நாடுகளில் உள்ள மக்களே அதிகம் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சுற்றுச் சூழல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வறுமையை ஒழிப்பது என்பது சிக்கலான ஒன்று எனவும், இது சத்து குறைந்த குழந்தைகள் பிறப்பு, நோய்கள், காயங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவு உற்பத்திக்கு தொடர் விளைச்சலுக்கு ஏற்ற மண்வளம், நிலைத்த காலநிலை, நல்ல நீர், சுற்றுச் சூழல் ஒத்துழைப்பு அவசியமாகிறது. நிலையற்ற காலநிலையில் தொற்று நோய்கள் எளிதில் குணமடையாத நிலைத் தொடரும். மேலும் அகதிகள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, மண்வளம் குன்றி வறுமையில் வாடுவோரின் நிலை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்த நிலை உருவாகாமல் தடுக்க தேசிய, சர்வதேச அளவில் உறுதியான நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தபட வேண்டும் என்று மெக்மைக்கேல் வலியுறுத்தியுள்ளார்.
|