பணித்தொடர்பான அழுத்தம் (Stress) நமது உடலில் நேரடியான பாதிப்புகளை உருவாக்குவதுடன் இருதய நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை உருவாக்குவது தெரிய வந்துள்ளது. எனவே அழுத்தத்தைக் கட்டுப்படுத்தினால் நோயின்றி வாழ முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இங்கிலாந்து அரசில் பணியாற்றும் ஊழியர்களின் பணிச் சூழல், அவர்களின் உடல் நிலை ஆகியன பல ஆண்டுகளாக கண்காணிக்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வில் கடை நிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை கலந்து கொண்டனர். பணித் தொடர்பான அழுத்தம் உள்ளவர்களில் 70 விழுக்காட்டினருக்கு இதய நோய்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பணித் தொடர்பான இந்த அழுத்தம் மனிதர்களுக்கு உடற்பயிற்சி செய்வதற்கான கால அளவைக் குறைப்பதுடன், சரியாக உணவு உட்கொள்வதையும் தடுக்கிறது. உடலில் பல்வேறு முக்கியமான உயிர்-வேதியல் மாற்றங்கள் ஏற்படவும் காரணமாக அமைவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1960 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தொழிலாளர்களின் பணி அழுத்தம் தொடர்பான ஆய்வில்,1985 ஆம் ஆண்டு தொடங்கி தொழிலாளர்களின் நடவடிக்கைகள் பதிவுச் செய்யப் பட்டதாகக் கூறியுள்ளனர். அதன்படி ஆய்வாளர்கள், பணிக் குறித்த தொழிலாளர்களின் உணர்வுகள், அவர்களின் இதய துடிப்பு வேறுபாடு, இரத்த அழுத்தம், இரத்தத்தில் உள்ள அழுத்த ஹார்மோனான கார்டிசாலின் அளவு, உணவு முறை, உடற்பயிற்சி, புகைப் பிடித்தல், குடிப்பழக்கம் ஆகியவற்றைக் கண்காணித்து வந்துள்ளனர்.
மேலும் இந்த ஆய்வின் மூலம் ஆய்வாளர்கள் தீராத இதய நோய்க்கு ஆளாகி மாரடைப்புக்கு உள்ளானவர்கள், உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரங்களை தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளனர். 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் தீராத பணி அழுத்தம் உள்ள 50 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கும் - பெண்களுக்கும் இதய நோய்களுக்கும் இடையேயான தொடர்பு வலுவாகவே உள்ளதாக லண்டன் பல்கலைக் கழக கல்லுரியைச் சேர்ந்தவரும், இந்த ஆராய்ச்சியின் தலைவருமான மருத்துவர் தரணி சந்தோலா தெரிவித்துள்ளார்.
ஓய்வு வெறும் நிலையில் உள்ளவர்களுக்கு பணி தொடர்பான அழுத்தம் அதிகம் இல்லாததால் அவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பணித் தொடர்பான அழுத்தம் உள்ளவர்களுக்கு போதுமான காய்கறி, பழ வகைகளைதங்களது உணவில் சேர்த்துக் கொள்ளவும், உடற்பயிற்சி மேற்கொள்ள இயலாமலும் போய்விடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிப்பழக்கம் இந்த ஆய்வில் ஒரு காரணியாக கண்டறியப்படவில்லை. அதேபோல வாழ்க்கை முறையும் நோய் வருவதற்கு ஒரு காரணமாக அமையவில்லை. ஆனால் அழுத்தத்திற்கும், நோய்களுக்குமான உயிரியல் இயங்குமுறையில் உள்ள தொடர்பு உள்ளதை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளனர். இவை இரண்டுக்கும் உள்ளத் தொடர்பு பல உள்ளது என்றும் ஆனால் அதனை நீருபிப்பதுதான் கடினமாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியை அழுத்தம் தடைச்செய்கிறது. இந்த நரம்பு மண்டல பகுதிதான் இதயம் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதைச் சொல்வதுடன், இதயத் துடிப்பின் வேறுபாட்டையும் கட்டுப்படுத்துகிறது. இதயத் துடிப்பைக் முறைப்படுத்தும் வேகல்டோன், அழுத்தம் உள்ளவர்களுக்கு குறைவாக உள்ளது. அதேப்போல ஹார்மோன்களைச் சுரக்கும் நியுரோஎன்டாக்ரின் முறையும், அழுத்தத்தால் பாதிப்புக்கு உள்ளாகிறது. அமுத்தம் அதிகம் உள்ளவர்களின் இரத்தத்தில் உள்ள அழுத்த ஹார்மோனான கார்டிசாலினின் அளவு காலை நேரத்தில் அதிகமாக உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பணித் தொடர்பாக ஏற்படும் மன அழுத்தம் உடலில் ஏற்படுத்தும் வேதியல் மாற்றங்கள் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக இங்கிலாந்து இதய அறக்கட்டளை மருத்துவர் ஜான் டேவிசன் கூறியுள்ளார் மேலும் மன அழுத்தம் காரணமாக புகைப் பிடித்தல், உடற்பயிற்சி மேற்கொள்ளாமை, சரியான முறையில் உணவு சாப்பிடாத குணம் போன்ற தேவையற்ற செயல்கள் நமது இருதயத்தின் நலனைக் கெடுக்கின்றன.
மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான சரியான வழிமுறைகளைக் கற்றுத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். நமது அன்றாட வாழ்க்கையில் யதார்த்தமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதன் மூலம் அழுத்தத்தை விலக்குவதோடு, இருதயம் தொடர்பான நோய்கள் தாக்குவதற்கான சாத்தியக் கூறுகளில் இருந்து தப்பலாம் என்று ஜான் டேவிசன் தெரிவித்துள்ளார்.
|