உலகில் அழிந்து வரும் 400 -க்கும் மேற்பட்ட மருத்துவ தாவர இனங்களால் எதிர்க்காலத்தில் சுகாதாரப் பிரச்சனைகள் மிகப் பெரிய அளவில் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வகை தாவரங்கள் அழிந்து வருவது எதிர்காலத்தில் நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளை உருவாக்குவதில் சிக்கலை தோற்றுவிக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
மருத்துவ தாவரங்களின் நிலைத் தொடர்பாக 120 -க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தாவரவியல் பூங்காக்கள், தோட்டங்களை இந்த ஆராய்ச்சிக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக் குழுவைச் சேர்ந்த 600 ஆய்வாளர்களுடன், பல முன்னணி பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த நிபுணர்களும் இதில் ஈடுபட்டனர். இந்த ஆராய்ச்சியில் உலகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட மருத்துவ குணம் கொண்ட தாவர இனங்கள் அழிந்து போகும் நிலையில் உள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
யூ மரப்பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் பேசிலாடேக்சல் புற்று நோயைக் குணப்படுத்த உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. இதுபோல நபிபீயா பாலைவனப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் ஹீடியா, உடல் பருமனைக் குறைக்கும் மருந்துகள் உற்பத்தி செய்ய மருந்து நிறுவனங்களால் அதிகம் விரும்பப்படும் மருத்துவ தாவர இனம் உள்ளிட்டவைகளும் அழிந்து போகும் நிலையில் உள்ளன. மங்கோலியப் பகுதியில் உள்ள உலகின் பாதிக்கும் மேற்பட்ட மருத்துவ தாவர இனங்கள் அழிந்து போகும் ஆபத்தில் உள்ளன.
பாரம்பரிய சீன மருத்துவ முறையில் புற்று நோய், இருதய நோய்களைக் கட்டுப்படுத்த உதவும் ஹோனோகியாலை தரும் தாவர இனமும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. கீல் வாதம், முடக்கு வாதம், இரத்த புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ஆட்டுமன் கிராகஸ் இனத் தாவரங்களும் வேகமாக அழிந்து வருவதற்கு காரணம் தோட்டக் கலைத்துறை வர்த்தகத்தில் இதன் இதழ்களுக்கு ஏகப்பட்ட மவுசு இருப்பது தான் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அழிந்து வரும் மருத்துவ தாவர இனங்கள் குறித்தான அக்கறை மக்களிடம் இருப்பதாக தெரியவில்லை என்றும், இந்த எச்சரிக்கை என்றும் மிகைப்படுத்தி கூறப்பட்ட ஒன்றும் அல்ல என தெரிவித்துள்ள இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் பெலிண்டா ஹவாகின்ஸ், இது போன்ற அரிய வகை மருத்துவ தாவர இனங்கள் அழிந்து வருவதைத் தடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மருத்துவ சிகிச்சை முறைகளைப் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.
இயற்கை நமக்கு அளப்பறிய அளவில் மருத்துவ தாவரஇனங்களைக் கொடுத்துள்ளது. விஞ்ஞானிகளுக்குத் தாங்கள் என்ன புதிதாக மேற்கொண்டுள்ளோம் என்ற கவலை. இந்நிலையில் மருத்துவ குணம் கொண்ட தாவரங்களின் அழிந்த போகும் சூழல் மிகுந்த பயத்தை உருவாக்குவதாக இங்கிலாந்து மருந்தியல் துறை கூட்டமைப்பைச் சேர்ந்த ரிச்சர்ட் லே தெரிவித்துள்ளார்.
|