'புகையிலை பொருட்கள் பயன்பாட்டால் ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் பலியாகின்றனர்' என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹேலிஸ் சேக்சரியா பொது சுகாதார நிறுவன இயக்குனர் டாக்டர் குப்தா கூறுகையில், "உலகளவில் சிகரெட், பீடி, குட்கா போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 கோடியாக உள்ளது. தினமும் 5 ஆயிரத்து 500 பேர் புதியதாக ஏதாவது ஒரு புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இந்த எண்ணிக்கை மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது" என்றார்.
புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் கனடா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், தாய்லாந்து, பிரேசில் மற்றும் ஐரோப்பிய ஐக்கிய நாடுகளில் புகையிலை பொருட்களின் பயன்பாடு ஆண்டுக்கு சராசரியாக ஒரு சதவீதம் குறைந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் பிறக்கப்படும் உத்தரவுகள்கூட முறையாக பின்பற்றப்படுவதில்லை.
"இந்தியாவில் புகையிலை சார்ந்த நோய்களின் தாக்கத்தால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். புகையிலை பொருட்களின் பயன்பாடும், புதியதாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பும் தொடர்ந்தால் உலகளவில் தற்போது ஆண்டுக்கு 50 லட்சமாக உள்ள இறப்பு எண்ணிக்கை வரும் 2030ம் ஆண்டில் ஒரு கோடியாக உயரும்" என்று உலக சுகாதார நிறுவனம் புகையிலை தடுப்பு பிரிவு இயக்குனர் டாக்டர் டோக்லஸ் பேட்ச்சேர் எச்சரித்துள்ளார்.
|