சர்க்கரை நோய் அதிகம் உள்ளவர்கள் கொண்ட நாடுகளில் வரும் 2030 ஆம் ஆண்டு இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்று ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டில் 3 கோடியே 17 லட்சமாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் வரும் 2030 ஆம் ஆண்டு 7 கோடியே 94 லட்சமாக அதிகரிக்கும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்து சீனா 2 கோடியே 80 ஆயிரம் நோயாளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஒரு கோடியே 77 லட்சம் நோயாளிகளுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்று படி கடந்த 2000 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் மொத்தம் 17 கோடியே 1டி லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இந்த எண்ணிக்கை வரும் 2030 ஆம் ஆண்டில் 36 கோடியே 66 லட்சமாக உயரும் என்று இந்த ஆய்வின் தலைவர் மருத்துவர் நீல் பெர்னார்ட் கூறியுள்ளார்.
90 விழுக்காடு பேர் இரண்டாம் வகை சர்க்கரை நோயாலும், 10 விழுக்காட்டினர் முதல் வகை சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டாம் வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடலில் இன்சூலினை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும், ஆனால் இதனை உடலில் உள்ள மற்ற திசுக்கள் இதன் நடவடிக்கையைத் தடுத்துக் கொண்டு இருக்கும். முதல் வகை சர்க்கரை நோயைப் பொறுத்த மட்டில் உடலில் நீண்ட காலத்துக்கு இன்சூலின் உற்பத்தி இல்லாத நிலையில், இன்சூலினை உடலில் செலுத்துவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
உணவுப் பழக்கத்தில் செய்துக் கொள்ளும் மாற்றம் உடலில் பல மாற்றங்களை உருவாக்குவதாகவும், சில நேரங்களில் இந்த இரு வகையான நோயை குணப்படுத்த மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போவதாகவும் அவர் கூறினார்.
இதற்கு காரணம் மேற்கத்திய உணவு முறைகள் தான் என்றும், இறைச்சி உணவுகளை இந்தியாவுக்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்து விட்டு, அரிசி, பருப்பு வகைகளை சாப்பிட்டு உடல் பருமன் இல்லாதவர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் அமெரிக்கர்கள் தங்களை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் பெர்னார்ட் கூறியுள்ளார். தாவரங்கள் அடிப்படையிலான உணவுப் பொருட்கள் இரத்த சர்க்கரையின் அளவையும், கொழுப்பையும் குறைப்பதோடு உடல் பருமனையும் குறைக்கிறது.
மாறாக இறைச்சி, மீன், கோழி, பால், முட்டை, சர்க்கரை, எண்ணெய் ஆகியவை அடங்கிய உணவுப் பொருட்கள் இரத்த சர்க்கரை அளவையும், கொழுப்பையும் அதிகரிப்பதோடு உடல் பருமனையும், கொழுப்பையும் அதிகரிக்கின்றன.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த 30 ஆண்டுகளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைப் போன்று இரண்டு மடங்காக உயரும் அபாயம் உள்ளதாக மருத்துவர் நீல் பெர்னார்ட் கூறியுள்ளார்.
|