ரோபோ உதவியுடன் இரண்டு பேருக்கு இருதய அறுவை சிகிச்சையை சென்னை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்! இருதய அறுவை சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்பம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையினால் நோயாளிகளுக்கு சில வசதிகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இம்முறையை பயன்படுத்துவதால் நோயாளிக்கு வலி குறையும் என்றும், அறுவை சிகிச்சையின் போது விரையமாகும் இரத்தத்தின் அளவும் கட்டுபபடுத்தப்படுவதால் இது நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
இந்த அறுவை சிகிச்சை முறையில் சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையின் போது குறைந்த அளவு திசுக்களே சேதமடைவதால் குறைந்த அளவே இரத்த விரையம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிக்கு குறைந்த அளவே இரத்தம் செலுத்தினால் போதுமானது.
இந்த சிகிச்சை முறையினால் குறைந்த அளவு பகுதிகள்தான் பாதிக்கப்படுகின்றன. அதனால் அறுவை சிகிச்சையின் போது போடப்படும் தையல் உறுதியாகவும் இருக்கும் என்று இம் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரவி குமார் தெரிவித்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சையின் போது அதிகமான அளவில் திசுக்களை சேதப்படுத்துவது இல்லை. எனவே வலி குறைவு. அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் ஏற்படும் வடுவும் குறைவு. சிறிது காலத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரும் போது ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் வடுக்கள் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இருதயத்தில் ஓட்டை உள்ள 25 வயது இளைஞர் ஒருவருக்கும், 28 வயதான இளைஞர் ஒருவருக்கு இடது ஆட்ரியோவென்ட்ரிகுலர் வால்வு மாற்றும் அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். ரோபார்ட் முறை ஏறக்குறைய வழக்கமான அறுவை சிகிச்சை முறையை போன்றது தான்.
திறந்த நிலை அறுவை சிகிச்சையின் போது 20 சென்டி மீட்டர் அளவுக்கு உடல் பகுதியில் கீறுவதற்கு பதிலாக இம்முறையில் 4 சென்டி மீட்டர் அளவுக்கு உடலைக் கீறினால் போதுமானது.
குறைந்த வலி, இரத்தப்போக்கு, புண், திசு சேதமே ஏற்படுவதால் இந்த முறை அறுவை சிகிச்சையை அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள பெரும்பாலான நோயாளிகளால் விரும்பப்படுவதாகவும் மருத்துவர் ரவி குமார் கூறியுள்ளார்.
|