உடலில் இரத்த நாளங்களின் வளர்ச்சியைக் கண்காணிக்கும் புதிய புரோட்டின் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அது பல்வேறு நோய்கள் உருவாகும் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவதாகவும் தெரியவந்துள்ளது.
உடலில் காயம் ஏற்பட்டவுடன் நம் உடலில் காயமடைந்த திசுக்களைச் சரிசெய்வதற்காக புதிய இரத்த நாளங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அதிகமானாலும் சிக்கலை உருவாக்கும். இவ்வாறு கண்ணில் உருவாகும் இரத்த நாளங்கள், கண்ணுக்குள் கசியும் நிலையில் உரிய சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அது பார்வை இழப்பை உருவாக்கிவிடும்.
வடக்கு கரோலினா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சி1பி1 என்ற புரோட்டின் நம் உடலில் புதிய இரத்த நாளங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதைக் கண்டறிந்துள்ளனர். உடலில் ஏற்பட்ட காயத்தை குணப்படுத்தவும், தேவைக்கு அதிகமான இரத்த நாளங்கள் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும் மருந்துகளைக் உற்பத்தி செய்ய இந்த புதிய புரோட்டின் உதவும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் சர்க்கரை நோய், விழித்திரை கோளாறு, அடிப்பட்ட காயங்கள் ஆகிய நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் போது தேவையில்லாமல் உற்பத்தியாகும் கூடுதல் இரத்த நாளங்களைக் கட்டுப்படுத்த இந்த கண்டுபிடிப்பு உதவும் என்று மருத்துவர் லெஸ்லி பிரைஸ் கூறியுள்ளார்.
நம் உடலில் எண்டோத்திலியல் திசுக்களில் உள்ள இந்த சி1பி1 புரோட்டின் இரத்த நாளங்களை ஒழுங்குபடுத்துகிறது. எண்டோத்திலியல் திசுக்கள் ஆன்ஜியோஜெனிஸிஸ் முறையில் பதிய இரத்த நாளங்களை உற்பத்தி செய்கின்றது. இதனிடையே உயிரியல் வழிகாட்டுதலின் பேரில் எண்டோத்திலியல் திசுக்கள் என்சைம்களை விடுவிக்கின்ளன. மற்ற வேதிப் பொருட்கள் அவை ஏற்கனவே உள்ள இரத்த நாளங்களில் இருந்கு விலகிச் சென்று புதிய இரத்த நாளங்களை உருவாக்க உதவுகின்றன.
|