வீட்டு வேலைகளைச் செய்யும் பெண்கள் இனி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்துகிற சுத்தப்படுத்தும் திரவங்கள் ஆஸ்துமா பாதிப்பை அதிகரிக்கக் கூடும்.
’வீடுகள், அலுவலகங்களில் அறைகளை மணமுட்டப் பயன்படுத்தப்படும் ஏர் ஃபிரஷ்னர்கள் (air fresheners), பொருட்களைச் சுத்தப்படுத்தப் பயன்படும் மிகை அழுத்த சோப்புத் திரவம் (furniture spray cleaners)ஆகியவற்றால் ஆஸ்துமா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஸ்பெய்னில் உள்ள மருத்துவ ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் ஜேன் பால் ஜோக் தலைமையிலான குழுவினர், ஐரோப்பாவில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் ஆஸ்துமா பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தினர்.
அதில், வாரத்தில் ஒருநாள் ஏர் ஃபிரஷ்னர் பயன்படுத்தினால் கூட அது, ஆஸ்துமா பாதிப்பை அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.
வீடுகளில் பொருட்களைச் சுத்தப்படுத்தப் பயன்படும் மிகை அழுத்தத் திரவங்கள் (sprays) , ஆஸ்துமா பாதிப்பை 15 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரிக்கின்றன. அதாவது ஆஸ்துமா பாதிப்புள்ள 7 பேரில் ஒருவர் இந்தத் திரவங்களால் மோசமான பாதிப்பை அடைகின்றனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் பத்து நாடுகளில் உள்ள 22 மையங்களில் ஆஸ்துமா பாதிப்புள்ள 3,200 பேர் ஆய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களிடம் 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வு சமயத்தில், தேர்வு செய்யப்பட்டவர்களிடம் அவர்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் மிகை அழுத்த திரவங்கள் பற்றி கணக்கெடுத்ததில், அத்திரவங்களை தினமும் பயன்படுத்துபவர்களுக்கு ஆஸ்துமா, மூச்சுத் திணறல், ஒவ்வாமை ஆகியவற்றின் பாதிப்பு இருமடங்கு அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
|