மனிதனின் சராசரி ஆயுட்காலத்தை அதிகரிக்க நிறைய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஸ்கீசோஃப்ரேனியா என்று அழைக்கப்படும் மனச் சிதைவு நோயாளிகளின் ஆயுளைக் கூட்டுவதில் இத்தகைய மருந்துகள் எந்த ஒரு குறிப்பிட்ட முன்னேற்றத்தையும் தரவில்லை என்று புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
சராசரி மனித மரணத்தை ஒப்பிடும்போது மனச்சிதைவு நோயாளிகள் மரணமடையும் வாய்ப்பு 2 அல்லது 3 மடங்கு அதிகம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வை ஆஸ்ட்ரேலியாவில் உள்ள குவீன்ஸ்லாந்து மன நோய் ஆய்வு மையம் மேற்கொண்டது. இந்த மன நோய் மையத்தின் பேராசிரியர் ஜான் மெக்ராத் இது குறித்து கூறுகையில், மனச்சிதைவு நோய்க்கு ஆளானவர்கள் எப்போதும் மனப்பிரம்மைகளிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு கண் முன்னே மாயக் காட்சிகள் தோன்றிய வண்ணம் இருக்கும். மேலும் தாறுமாறான சிந்தனை இருக்கும். இதற்கு மருந்து இருக்கிறது என்றாலும் இந்த மருந்துகளின் பக்க விளைவுகள் மோசமானவை என்கிறார்.
1980 முதல் 2006 வரை நடந்த 37 ஆய்வுகளை இந்த மன நோய் ஆராய்ச்சி மைய மருத்துவப் பேராசிரியர்கள் மீண்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். இதில் மனச்சிதைவு நோய் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை எண்ணம் கொண்டவர்கள். இவர்களில் பெரும்பாலோனோர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். என்று கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த ஆய்வில் தெரிய வரும் மனச்சிதைவு நோயாளிகளின் மரண விகிதம் நம் மருத்துவ முறைகளுக்கு பெரிய சவாலையே ஏற்படுத்துவாதாக உள்ளது என்று பேராசிரியர் மெக்ராத் கருத்து தெரிவிக்கிறார்.
மனச் சிதைவு நோய்களுக்கு அளிக்கப்படும் மருந்து மாத்திரைகளால் உடல் எடை கூடுதலும், 2-ஆம் வகை சர்க்கரை நோயும் ஏற்படுவது சகஜமாகி வருகிறது என்கிறார் மெக்ராத்.
இதனாலேயே மனச்சிதைவு நோயாளிகள் மருந்துகளை எப்போதாவதுதான் எடுத்துக் கொள்கின்றனர். இந்த மருந்துகளின் மிக் மோசமான பக்க விளைவு என்னவெனில் அவனிடமிருந்து வாழ்வுந்துதலையே அகற்றி விடுகிறது என்று எச்சரிக்கிறார் இந்த ஆய்வுக் குழுவில் உள்ள மருத்துவர் மெக்லாஷன்.
இதனால் அவர்களுக்கு நோய் திரும்புகிறது. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருக்கிறது. மீண்டும் மருந்துகள், பக்க விளைவுகள், மரணம் என இவையே நடைமுறையாகி வருகிறது என்று கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
ஆனால் இவையெல்லாம் ஒன்றை மட்டும் நன்றாக உணர்த்துகிறது. மன நோயாளிகள் போன்ற விளிம்பு நிலை மனிதர்கள் மீது நமது மருத்துவ விஞ்ஞானங்களுக்கு அதிக அக்கறை இல்லை என்பதே அது.
|