செயற்கை இதயத்துடன் 120 நாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன்.
செயற்கை கை, கால்கள், செயற்கை எலும்பு என மனிதனின் எத்தனையோ பாகங்கள் செயற்கையாக வந்து விட்டன. மனிதனின் உயிராகக் கருதப்படும் இதயமும் தற்போது செயற்கை எனும் அதிசயத்திற்கு தலை வணங்கிவிட்டது. ஆம் செயற்கை இதயம்தான். அந்த செயற்கை இதயத்தைப் பொருத்திக் கொண்டுள்ள ஒரு சிறுவன் லண்டனில் 120 நாட்களாக உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறான் என்பது மற்றுமொரு அதிசயமே.
பிறந்த 8 மாதங்களே ஆன ஜாக் வெலம் என்ற குழந்தைக்கு இதய தசைகள் வீக்கமடைந்து மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அப்போது அந்த குழந்தைக்கு செயற்கை இதயத்தைப் பொருத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதை மருத்துவர்கள் உணர்ந்தனர்.
அவனது இதயம் சீராகும் வாய்ப்புக் குறைவு என்பதையும், குழந்தையின் நிலை குறித்தும் பெற்றோருக்கு எடுத்துக் கூறப்பட்டது. அவர்களும் சிறிது நேர உரையாடலுக்குப் பின் முழு மனதோடு சம்மதித்தனர்.
"எனது குழந்தைக்கு வாழ ஏதாவது ஒரு வழி இருந்தாலும் போதும். அவன் கஷ்டப்படுவதை பார்க்க முடியவில்லை. எப்படியாவது அவனை மீண்டும் உயிருடன் பார்க்க விரும்புகிறோம்" என்று அவனது பெற்றோர்கள் டேனியல்லே ஹாஸ்டிங்ஸ்-டெர்ரி வெலம் தெரிவித்தனர்.
அதன்பிறகு ஜாக் வெலத்திற்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. அந்த செயற்கை இயந்திரம் வெளியில்தான் இருந்தது. அதன் இணைப்பு, அவனது உடலில் உள்ள நரம்புகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. அவனது அனைத்து செயல்பாடுகளையும் அந்த இயந்திரமே கட்டுப்படுத்தியது. அந்த இயந்திரம் மடிக் கணினியுடன் (லேப்-டாப்) இணைக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் குழந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை கண்காணித்து வந்தனர்.
இதில் மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் பழுதடைந்திருந்த அவனது இதயமும் கொஞ்சம் கொஞ்சமாக சீரடைந்து வருகிறது. எனவே கூடிய விரைவில் அவனது சொந்த இதயமே அவனை இயக்கும் என்று மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கு முன்பு இதுபோன்ற செயற்கை இதயத்தின் மூலம் பிரிட்டனில் ஒரு குழந்தை அதிகபட்சமாக 30 நாட்கள் மட்டுமே உயிர் வாழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|