சிக்குன் குனியா பாதித்த மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் மத்திய அமைச்சர் அன்புமணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சர்கள் டாக்டர் அன்புமணி நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் சிக்குன் குனியா நோய் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிக்குன் குனியா பாதித்த மாநிலங்களின் சுகாதார துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வருகிற வியாழக்கிழமை நடக்கிறது. இந்த கூட்டத்தில் கேரளா, தமிழகம், கர்நாடகா, கோவா, மாகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களின் சுகாதார துறை அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள். அப்போது எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்குன் குனியா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக என்ன செய்ய வேண்டும் என்றும், எவ்வளவு தொகை வேண்டும் என்றும் முடிவு செய்யப்படும்.
இந்தியாவில் 11 மாவட்டங்களில் சிக்குன் குனியா பாதிப்பு உள்ளது. இந்த நோய் 32 ஆண்டுகளுக்கு பின்பு ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நுழைந்துள்ளது. 3 ஆண்டுகள் சிக்குன் குனியா நோய் இந்தியாவில் நீடிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே இதை தடுக்க கூட்டு முயற்சி தேவை.
அரசுடன் பொதுமக்களும் இணைந்து தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும். குளங்கள் இருந்தால் அங்கு கொசு உற்பத்தியாகாமல் தடுக்க "டெமிபாஸ்'' என்ற மருந்து தெளிக்க வேண்டும்.
சிக்குன் குனியா நோயை குணப்படுத்தும் மருந்து கிடையாது. பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் `பாராசிட்டமால்' மாத்திரை போட்டுக்கொள்ளலாம். இதன் பாதிப்பால் யாரும் இறக்க மாட்டார்கள்.
கேரளாவுக்கு 2 மத்திய குழுவினர் ஆய்வு செய்துவிட்டு அறிக்கை அளித்துள்ளனர். அங்கு சிக்குன் குனியாவுக்கு யாரும் பலியாகவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நோய் வராமல் தடுக்க ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்துகள் இணைந்து கொசு தடுப்பு மருந்து அடிக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.
|