மஞ்சள் காமாலை நோயில் ஹெபடைட்டிஸ் சி வகை குறித்து ரான்பாக்சி சயன்ஸ் ஃபவுண்டேஷன் 2001 ஆம் ஆண்டு சிறப்பு கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. இதில் பல கேஸ்ட்ரோ-என்டராலஜிஸ்டுகள், நோய்கணிப்பு நிபுணர்கள் மற்றும் சில மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். இதில் ஹெபடைட்டிஸ் சி வகை மஞ்சள் காமாலை வைரஸ் குறித்த சமீபத்திய கண்டுபிடிப்புகள், சிகிச்சையில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவை விவாதிக்கப்பட்டன. அதில் கூறப்பட்ட கருத்துகளின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை கீழே பார்ப்போம் :
ஹெபடைட்டிஸ் சி வகை மஞ்சள் காமாலை உலகம் முழுதும் 150 மில்லியன் மக்களை பாதித்துள்ளது. இதில் 15 அல்லது 20 சதவீதம் பேருக்கு நாட்பட்ட கல்லீரல் நோயும், கல்லீரல் வீக்கமும், கல்லீரல் புற்றும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பெற்ற கவனம் ஹெபடைட்டிஸ் சி குறித்து ஏற்படாதது துரதிர்ஷ்டமே. இதனால் இந்த நோய் பற்றி பலர் இன்னமும் அறியாமலேயே உள்ளனர். இந்தியாவில் குறைந்தது 18 மில்லியன் பேர் ஹெபடைட்டிஸ் சி வைரசுக்கு பாதிப்படைந்துள்ளனர்.
காரணமும், நோய்த் தொற்றுதலும்
ஹெபடைட்டிஸ் சி வைரஸ் ரத்தத்தின் மூலமும், பால்வினை தொடர்பாலும் அல்லது நுண்ணுயிரி மூலமும் உடலில் நுழைகிறது. இதன் நோய்க்குறிகள் துலங்கும் முன் அதன் நுண்மங்கள் ஆக்கம்பெறும் காலம் 2-26 வாரங்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர், அதாவது நோய் தொற்றிய பிறகு 2 முதல் 26 வாரங்கள் வரை நோய் அறிகுறிகள் தோன்ற துவங்கலாம் அதாவது நாள்பட்ட பிறகே இது தெரிய வரும். நோய் வந்ததிலிருந்து 5-10 ஆண்டுகள் கழித்து நாட்பட்ட கல்லீரல் நோய் ஏற்படும்.
ரத்தத்தின் மூலம் இந்த நோய் பலவழிகளில் பரவும் தன்மை கொண்டது. குறிப்பாக ரத்தம் ஏற்றும்போது பரவுதலே அதிகம். அதாவது ரத்தம் கொடுப்பவருக்கு இந்த வைரஸ் தொற்றியிருக்கும்போது ரத்தம் ஏற்றப்படுபவருக்கும் இது தொற்றும். இந்த வைரஸ் தொற்றும் பிற வழிகள் வருமாறு :
எ கிருமி தொற்றிய சிரிஞ்சுகள் மூலம் நரம்பு வழி மருந்து ஏற்றப்படும்போது.
எ நோய் தொற்றியுள்ளவர் பயன் படுத்தும் பொருட்கள் மூலம் குழந்தைகள் மற்றும் உறவினருக்கும் பரவலாம்.
எ காது குத்துதல், பச்சை குத்திக்கொள்ளுதல் போன்றவற்றில் சுத்தம் செய்யப்படாத உபகரணங்கள் பயன் படுத்தப்படுவதால் இந்த வைரஸ் தொற்றும் வழி சுலபமாகிறது.
எ குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டும்போது நோய் தொற்றிய தாய்மார்கள் பால் கொடுப்பதை நிறுத்திக் கொள்வது நல்லது.
எ சதையை துளைக்கும் எந்த ஒரு விஷயமும் ஹெபடைட்டிஸ் வைரஸ் ஊடுருவ காரணமாகிறது.
எந்த ஒரு காரணத்திற்காகவும் ரத்த பரிவர்த்தனை செய்யும்போதும் இந்த நோய் தொற்றும் அபாயம் உள்ளது. அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு இந்த வைரஸ் தாக்கும் அபாயம் உண்டு. இதில் மகப்பேறு மருத்துவ அறுவை சிகிச்சை, அடிவயிறு அறுவை சிகிச்சை, கண் அல்லது இருதய அறுவை சிகிச்சை, மேலும் பல் சிகிச்சை செய்துகொள்பவர்களுக்கும் இந்த வைரஸ் ஊடுருவும் அபாயம் அதிகம் உள்ளது. ரத்த சுத்திகரிப்பு செய்துகொள்பவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆகியோருக்கு இந்த வைரஸ் தொற்றுவது சுலபம். மேலும் எந்த ஒரு நோய் தாக்கும்போதும் அதனுடனே ஹெபடைட்டிஸ் சி யும் தொற்ற வாய்ப்புள்ளது என்பது முக்கியமான விஷயம்.
இது கல்லீரல் மட்டுமல்லாது கணையத்தையும் பாதிக்கும் ஒரு மோசமான வைரஸ் என்பதில் சந்தேகமில்லை. இந்த நோயை கணிப்பதில் உள்ள பிரச்சனை என்னவெனில் 70-90 சதவீதத்தினருக்கு நோய் அறிகுறிகளே தோன்றாது. எனவே ஏதாவது சந்தேகத்தின் அடிப்படையில் சில பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொள்ளும்போது மட்டுமே இது இருப்பது தெரியவருகிறது.
சிகிச்சை
இதற்கு பெரும்பாலும் மருந்து மாத்திரைகள் தற்போது வந்து விட்டன. இன்டர்ஃபெரான் அமான்டடைன் மற்றும் ரிபாவேரின் போன்ற மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இன்டர்ஃபெரான் மற்றும் ரிபாவேரின் இணைந்து 6 மாத காலத்திற்கு கொடுப்பதே இதற்கு மருத்துவர்கள் கடைபிடிக்கும் வழி. இருப்பினும் இந்த சிகிச்சை சில தருணங்களில் கவனத்துடன் மேற்கொள்ளப்படுவது அவசியம்.
எ கிட்னி பழுது அல்லது மாற்று
எ ஹெச்.ஐ.வி வைரஸ்
எ குழந்தைகள்
எ ரத்தம் தொடர்பான நோய்கள்
எ நோயாளி ஏற்கனவே கெமோதெரபி அல்லது வேறு ஏதேனும் எதிர்ப்பு சக்தி ஒடுக்கும் சிகிச்சையில் இருக்கும்போது.
ஆகிய சந்தர்ப்பங்களில் மருத்துவ சிகிச்சையில் கூடுதல் கவனம் தேவை. இன்டர்ஃபெரான், மற்றும் ரிபாவேரின் சிகிச்சை பொதுவானது என்றாலும், கர்ப்ப காலம், இருதய மற்றும் மன நோய் உள்ளவர்களுக்கு இன்டர்ஃபெரான்-ரிபாவேரின் இணை சிகிச்சை கூடாது.
இதற்கு வாக்சைன்கள் வரலாம் என்றாலும், ஹெபடைட்டிஸ் சி வைரஸ் பல வகைகள் உள்ளதால், ஒரே ஒரு வாக்சனில் இதனை கட்டுப்படுத்துவது இயலாது. விலங்குகளில் இதற்கான வாக்சைனை பரிசோதனை செய்வதும் இது வரை இல்லை.
மேற்சொன்ன தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் ஹெபடைட்டிஸ் சி வைரஸிற்கான சிகிச்சை ஏராளமான பிரச்சனைகள் கொண்டது என்பது தெளிவாகிறது. இந்த நூற்றாண்டின் மத்தியில் ஹெபடைட்டிஸ் சி என்று அழைக்கப்படும் ஹெச்.சி.வி நோய் கவலை அளிக்கும் ஒரு நாட்பட்ட நோயாக மாறும் அபாயம் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த ஹெபடைட்டிஸ் சி குறித்த தொற்று நோயியல் முழுதும் ஆய்வு செய்யப்படவேண்டும். அப்போதுதான் அது ஒரு மிகப்பெரிய தொற்று நோயாக உருமாறும் வாய்ப்பை தடுக்க முடியும்.
|