நோய் அணுக்களால் பாதிக்கப்பட்ட பித்த நீர், கணைய நாளத்தினுள் புகுந்தால் கணைய அழற்சி ஏற்படுகிறது. அல்லது பித்தக் கற்கள் கணையத்தினுள் சென்றாலும் கணைய அழற்சி ஏற்படலாம். அடிக்கடி ஏற்படும் கணைய அழற்சி பித்தப்பை அழற்சியுடன் இணைந்தே தோன்றுகிறது. கணையப் பகுதியின் மீது அடிபட்டாலும் தாளம்மை நோயின் பின் விளைவாகவும், புளு சுரத்தின் பின் விளைவாகவும் கணைய அழற்சி ஏற்படலாம்.
கணைய அழற்சி மூன்று வகையாகும். அவை :
1. தீவிர குருதியொழுகும் கணைய அழற்சி
2. கடுமை குறைவான கணைய அழற்சி
3. நாட்பட்ட கணைய அழற்சி ஆகியவையாகும்.
தீவிர குருதியொழுகும் கணைய அழற்சி :
பித்தப்பையில் உற்பத்தியாகி இருக்கும் பித்தக்கற்கள் நகர்ந்து சென்று கணைய நாளத்தை அடைகின்றன. அந்தப் பித்தக் கற்களின் கூர்முனை கணையத்தின் உட்பகுதியைக் குத்தினால் குருதி ஒழுகும். எனவே இதனைத் தீவிரக் குருதியொழுகும் கணைய அழற்சி என்கிறோம். பித்தக் கற்கள் கணைய நாளத்தை அடைத்திருக்கலாம் அல்லது கணைய நாளத்தினுள் நாக்குப்புழு உட்சென்று அடைத்துக் கொள்ளலாம். அல்லது குடற்புற சுருக்குத் தசையில் வலிப்பு ஏற்பட்டு கணைய அழற்சி உண்டாகலாம். நோயணு நிறைந்த பித்த நீர் கணையத்தை தூண்டிக் கணைய நொதியங்களை கூடுதலாகச் சுரக்கச் செய்கிறது. பித்தக் கற்கள் உராய்வினாலும், பித்த நீர் செறிவின் காரணமாகவும் தோன்றிய குருதியொழுக்கினை, கூடுதலாகச் சுரந்த கணைய நொதியங்கள், தானே சீரணித்து விடுகின்றன. இந்த நொதியங்கள் கணையத்தில் உண்டாகும் கொழுப்புச் சிதைவுகளையும் சீரணித்து விடுகின்றன.
நோய்க்குறிகள் :
1. கடுமையான வயிற்று வலி தோன்றும். அதன் கடுமை தாளாது நோயாளர் அதிர்ச்சியுற்று மயக்கமடைவார்.
2. நாடி, விரைவு நாடியாகவும் இழையோடும் நாடியாகவும் இருக்கும்.
3. குருதியழுத்தம் குறையும். கால், கை, முகம் முதலியவை சில்லிட்டு வியர்த்திருக்கும். உதடுகள் நீலித்து இருக்கும்.
4. திடீரென்று நோயாளரின் நினைவு குன்றும்.
5. வாந்தி கடுமையாகவும், தொடர்ந்தும் இருக்கும். வாய்வழியாக உள்ளுக்குள் எது சென்றாலும் சென்ற மறு நிமிடமே வாந்தியாகிவிடும். இந்த அறிகுறிதான் நோயாளரையும் மருத்துவரையும் மிகவும் குழப்பத்திற்கு உள்ளாக்குகிறது.
6. பிறகு வயிற்றின் மேற்புற தோலில் நீலநிறத் திட்டுக்கள் தோன்றும்.
7. வயிற்றுத் தசைகள் இறுதிக் கடினமாகத் தோன்றும். ஆனால் அடிவயிறு இளக்கமாக இருக்கும்.
8. குடலின் அலைவு இயக்கம் தானே குறையும்.
|