சில குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளும். மூக்கடைத்துக் கொள்ளும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். ஆங்கில மருத்துவத்தில் மூக்கினுள் சதை வளர்ந்திருக்கிறது என்று உடனடியாக அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு என்று கூறுவர். ஆனால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகும் இந்த தொல்லை நீடிக்கும் தருணமும் உண்டு. இந்த பிரச்சனையை ஹோமியோ மருந்துகளால் அறுவை சிகிச்சை இன்றி முற்றிலும் குணமாக்க முடியும்.
குழந்தைகளுக்கு சளி பிடிப்பது இயல்பான ஒன்றுதான். அதே நேரம் அடிக்கடி இந்த தொல்லை தொடர்ந்தால் முறையான சிகிச்சை அவசியமாகிறது. பொதுவாக சளியுடன் கூடிய தொண்டை வலி பெரும்பாலும் டான்சில் அழற்சியாலேயே உண்டாகிறது.
பலமுறை சரியான மருந்துகளை கொடுத்தும் இந்த தொல்லைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். சில குழந்தைகள் மூக்கில் சுவாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதற்கு மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். இவை அடினாய்ட் அழற்சி நோய் காரணமாக இருக்கலாம்.
அடினாய்ட் என்பது மூக்கிற்கும் மூச்சு ஆரம்பக் குழலிற்கும் இடைப்பகுதியில் அமைந்துள்ளது. மூக்கின் உள் அறையின் மேல் பகுதியும் பின்புறப் பகுதியும் இணையும் இடத்தில் உள்ளது. நிணநீர் சதைக்கோளம், இது பொதுவாக குழந்தை பருவத்தில் அனைவருக்கும் காணப்படும். இந்த அடினாய்டு குழந்தை வளர, வளர சுருங்கி செயலிழந்து விடும். இந்த அடினாய்ட் அழற்சி மற்றும் வீக்கம் போன்ற தொல்லைகள் பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலே அதிகம் காணப்படுகிறது. அதாவது 2-லிருந்து 10 வயது வரைதான் இதன் தொல்லை அதிகம். இவ்வாறு வீக்கமடைவதால் மூச்சுப்பாதை தடைபடுவதோடு பல்வேறு வகையான தொல்லைகளுக்கும் ஆட்படவேண்டியிருக்கிறது.
அடினாய்ட் அழற்சியை முழு அழற்சி மற்றும் பகுதி அழற்சி என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். பகுதி அழற்சியில் வீக்கம் முழுதும் இருக்காததால் மூக்கு வழியாக சுவாசிக்கமுடியும்.
முழு அழற்சி ஏற்பட்டால் மூச்சு வாய்வழியாக மட்டுமே விட முடியும். இதனால் மூக்கினுள் சளி கட்டியாக அடைத்துக் கொண்டு குழந்தை அதை வெளியேற்ற மிகவும் சிரமப்படும். வறட்டு இருமல் காணப்படும். கழுத்தை திருப்புவதற்கு சிரமம் ஏற்படும். மேலும் காதில் ஒரு விதமான வலியுடன் கூடிய அரிப்பு தோன்றும். இதனால் குழந்தைகள் காதை குடைந்து கொண்டே இருப்பார்கள். காதினுள் அழற்சி ஏற்பட்டால் குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் சற்று மந்தமாக இருக்கும்.
மூக்கு வழி சுவாசம் தடைபட்டு முழு அடினாய்டு வீக்கத்தில் வாய்வழி மட்டுமே சுவாசம் காணப்படுவதால் டான்ஸில் வீக்கமடைந்து சிவந்து காணப்படுவதோடு, தொண்டை வலி, உணவு விழுங்குவதில் சிரமம், கரகரப்பான குரல் போன்ற தொல்லைகளும் தோன்றும். இந்த தொல்லைகளினால் குழந்தையால் சரிவர உணவு உட்கொள்ள முடியாத நிலையும், குறைந்த அளவு உணவால் எடைக்குறைவும் ஏற்படுகிறது.
ஹோமியோபதி மருந்துகள் :
முன் மூச்சுகுழலில் தோன்றிய, அழற்சி உணவுக்குழல் தொல்லைகளுக்கு ஆரம்மெட் என்ற மருந்து சிறந்தது. டான்சில் வீக்கம், நிணநீர் கோள்களில் வீக்கம், தொட முடியாத அளவிற்கு வலி, தொண்டையில் விழுங்க முடியாத நிலை மற்றும் காய்ச்சல் போன்ற தொல்லைகளுடன் கூடிய அடினாய்டிற்கு ஆர்ஸ் அயோடம் என்ற மருந்து நல்ல குணம் தரும். இடது புற டான்ஸில் வீக்கம், மூக்கடைப்பு, இடது பக்க தலைவலி போன்ற பெரும்பாலான இடது புற தொல்லைகளுடன் கூடிய அடினாய்டிற்கு லேக்கசிஸ் என்ற மருந்து சிறப்பானது. கெட்டியான மஞ்சள் போன்ற சளியுடன் கூடிய மூக்கடைப்பு, வெளிச்சத்தில் உண்டாகும் தலைவலி மற்றும் பகலில் பெரும்பாலும் அடினாய்டு உபாதைகள் அதிகம் காணப்பட்டால் நேட்ரம்கார்ப் என்று மருந்து சிறந்தது.
நேட்ரம் ஆர்ஸ், சபேடில்லா, சல்பர், ஆர்ஸ் ஆல்பம், டிய்யொக்ரியம் போன்ற மருந்துகளும் பயன் படுத்தலாம். டாக்டரின் ஆலோசனையின் பேரிலேயே வீரியத்தை தேர்வு செய்து சிகிச்சை பெற வேண்டும்.
நன்றி : டாக்டர் வி.எம்.சசிகுமார் ஹோமியோபதிச் சுடர்-பிப்ரவரி-2002
|