மேலைநாட்டு உணவுப் பழக்கம் வளரும் நாடுகளில் புற்றுநோய்க்கு பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகிறது என்று அமெரிக்க புற்று நோய் அறக்கட்டளை மருத்துவ நிபுணர் அகமதின் ஜமால் எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும் நடப்பாண்டில் நாள் ஒன்றுக்கு 20,000 பேர் புற்றுநோய்க்கு பலியாகியுள்ளதாக அமெரிக்க புற்றுநோய் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. நடப்பு 2007 -ம் ஆண்டில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் புற்று நோயால் தாக்கப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் புற்று நோய்க்கு பலியாகி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளைச் சேர்ந்தவர்களில் 54 லட்சம் பேரும், வளரும் நாடுகளைச் சேர்ந்த 67 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. புற்று நோயால் இறந்தவர்களில் 29 லட்சம் பேர் வளர்ச்சியடைந்த நாடுகளையும், 47 லட்சம் பேர் வளரும் நாடுகளையும் சேர்ந்தவர்கள் என்பது சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பின் (International Agency for Research on Cancer) குளோபோகேன்-2002 புள்ளி விவரங்களில் இருந்து தொகுக்கப்பட்டது ஆகும்.
புற்றுநோய் தாக்கியவர்களைத் சோதனைச் செய்து பார்த்ததில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பொதுவாக ஆண்களை குதம், நுரையீரல், பெருஞ்சுரப்பிகளிலும், பெண்களை குதம், மார்பகம், நுரையிரல் ஆகிய உறுப்புகளில் வருவது தெரிய வந்துள்ளது. வளரும் நாடுகளைப் பொறுத்த மட்டில் ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, ஈரற்குலை மற்றும் பெண்களுக்கு வயிற்றுப்பகுதி, மார்பகம், கருப்பையின் தலைப்பகுதி ஆகிய உறுப்புக்களையும் பெரும்பாலும் தாக்குவது தெரிய வந்துள்ளது. இவைதான் பெரும்பாலும் மரணத்துக்கு வழிவகுக்கின்றன.
வளரும் நாடுகளில் புற்றுநோய் தாக்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது போன்ற நாடுகளில் தொற்றுநோய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ள நிலையிலும் புற்று நோய் தாக்கம் அதிகரித்து வந்தால் எப்படி முதுமை நிலையை எட்ட வாய்ப்பு கிடைக்கும் என்று மருத்துவ நிபுணர் அகமதின் ஜமால் கேள்வி எழுப்பியுள்ளார்.
வளரும் நாடுகளில் புற்றுநோய் அதிகரிப்புக்கு காரணம் புகை பிடிப்பது, பதப்படுத்தப்பட்ட கொழுப்புச் சத்து உள்ள உணவுப் பண்டங்களையும், கலோரிச் சத்து அதிகம் உள்ள ஊட்டச் சத்துக்களை அதிகம் உட்கொள்ளும் நிலையில் உடல் பயிற்சி, பிற இயங்கு நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது என்றும் அகமதின் ஜமால் தெரிவித்துள்ளார்.
|