- ஷைலஜா
"மேன்மைப்படுவாய் மனமே கேள் பயத்தால் ஏதும் பயன் இல்லை"
என்கிறார் பாரதி. ஆம், பயம் நம்மை அழிக்க நினைக்கும் வலிமையான ஆயுதம்.
பயம், பயந்த சுபாவம் என்பது பிறக்கும் போதே கூடப் பிறந்த பல சுபாவங்களில் ஒன்று. வாழ்க்கை வழிமுறைகள் மாற்றியோ அல்லது திருத்தியோ அமைக்கப்பட்டால் பயம் விலகி விடுவது உறுதி.
இரத்த சோகை
பயம், படபடப்பு, கையில் வியர்ப்பது, நடுக்கம் இவைகள் ஒருவருக்கு இரத்த சோகை இருந்தால் நிச்சயம் இருக்கும்.
இதற்கு ரத்தத்தில் ஹீமோக்ளோபின் அளவை பரிசோதிக்க வேண்டும். 13க்கும் குறைவானால் இரும்புச்சத்து மிகுந்த முருங்கைக் கீரை, காரட், பேரிச்சம்பழம் போன்றவற்றை உடனே சாப்பிட்டு தேற்றிக் கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க மருத்துவரை அணுகிக் கேட்டுத் தெரிந்து தெளிந்து கொள்ளவும். இரத்தப்போக்கு அதிகம் ஏற்படுமாயின் அதாவது விபத்து, சீதபேதி மூலம் வயிற்றில் புண், ரத்த வாந்தி முதலியன தொடர்ந்தால் படபடப்பு, பயம் இருக்கலாம்.
அதிக அளவு "நீர்" வெளியேறுதலும், வியர்த்துப் போதலும் நாளொன்றுக்கு ஐந்தாறு முறை மலம் கழித்தல் போன்றவற்றில் பயம் தோன்றலாம்.
உணவு, தூக்கம்
சரியான உணவு உண்ணாமை, இரவு நேரப்பணி, தூக்கமின்மை இவைகளாலும் உடலில் சக்கரையின் அளவு குறையும் போதும் படபடப்பு ஏற்படலாம்.
தொடர்ந்து தூக்க மாத்திரைகளை அல்லது வலி கொல்லி மாத்திரைகளை விழுங்குவது நரம்புகளை பலவீனப்படுத்தி பயம், படபடப்பை உண்டாக்கலாம்.
வாலிப வயதினருக்கு
வாலிப வயதினருக்கு இரவில் கனவில் விந்து அதிகம் வெளியேறினால் பயம், படபடப்பு ஏற்படும் இதற்கு இரவில் படுக்க போகும் முன்பு சூடான பால் அருந்துவதும், நல்ல நீதிநெறிக் கதைகளைப் படித்து உறங்கப் போவதும் பயம், படபடப்பைக் குறைக்கும்.
மற்றவர்களுடன் பேசும் போது மனம் விட்டுப் பேசவும், புத்திசாலித்தனமாய்ப் பழகவும் அறிந்து கொண்டு விட்டால் அநாவசிய பயம் தோன்ற வாய்ப்பில்லை.
இதய நோய் இருந்தால் பயமும், படபடப்பும் வந்து விடும்.
விட்டமின்கள் குறைவு, சரிவிகித உணவு இல்லாமை, தாழ்வு மனப்பான்மை, எதிலும் திருப்தி இல்லாமை, அதிகமாய் சந்தேக புத்தி - இவைகள் பயம், படபடப்பை அதிகப்படுத்தும்.
இவற்றைப் பழக்கவழக்கங்கள் மாற்றுவதன் மூலம் சரி செய்து விடலாம்.
|