குழந்தைப் பேறுக்காக மேற்கொள்ளப்படும் ஐ.வி.எஃப் (In Vitro Fertilization) சிகிச்சையால் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து ஏதுமில்லை என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நெதர்லாந்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ஐ.வி.எஃப் சிகிச்சை எடுத்துக் கொள்வதாலேயே மார்பகப் புற்றுநோய் உருவாகும் என்ற கருத்தில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.வி.எஃப் சிகிச்சைக்கும் மார்பகப் புற்றுநோய்க்கும் எவ்விதமான உறுதியான தொடர்பும் இல்லையென்றாலும், சில ஆராய்ச்சியாளர்கள் கரு முட்டை உற்பத்திக்காக அளிக்கப்படும் சில மாத்திரைகளால் புற்றுநோய் ஏற்படலாம் என்று கருதுவதாக தெரிய வந்துள்ளது.
அதுபோன்ற மாத்திரைகளால் ஆஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் அதிக அளவுக்கு உற்பத்தி செய்யப்படும் என்றும், மார்பகப் புற்றுநோய்க்கு இந்த வகை ஹார்மோன் காரணமாகக் கூடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்து புற்றுநோய் கழகத்தைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா வான் டென் பெல்ட்-ட்யூஸ்பவுட் ஆராய்ச்சியாளர் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கருவுருதல் தொடர்பான சிகிச்சையால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற இனப்பெருக்க மருத்துவம் தொடர்பான மாநாட்டில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. |