மருத்துவக் காப்பீடுகள்
மருத்துவக் காப்பீடு என்பது தனி ஒருவருக்கோ, குடும்பத்தினருக்கோ, குழுவினருக்கோ என எப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக காப்பீடு எடுக்கும்போது ஒரு குறிப்பிட்டத் தொகை என்றும், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு என்பதும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்டத் தொகையை காப்பீடு எடுத்துக் கொள்ள விரும்பும் நபர் முழுமையாகவோ அல்லது தவணை முறையிலோ காப்பீடு நிறுவனத்திடம் அளித்திட வேண்டும்.
நாம் காப்பீடு எடுத்திருக்கும் காலக்கட்டத்திற்குள் நமக்கு ஏற்படும் மருத்துவச் செலவை இந்த காப்பீடு நிறுவனம் ஈடு செய்யும். அதாவது காப்பீடு எடுத்திருக்கும் தொகை மற்றும் நமக்கான மருத்துவ செலவு இவை இரண்டில் எது குறைவாக உள்ளதோ அந்தத் தொகையை காப்பீட்டு நிறுவனம் அளிக்கும்.
ஒரு சில நிறுவனங்களில் ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொடுக்கிறது. இதுபோன்ற மருத்துவக் காப்பீடுகள், நமக்கு செலவாகும் தொகையை நேரடியாக மருத்துவமனையின் கணக்குக்கு அனுப்பி விடுகின்றன.
மருத்துவமனையில் தங்கும் அறை, மருத்துவருக்கான கட்டணம், அறுவை சிகிச்சை நடந்தால் அதற்கான தொகை போன்ற பல செலவுகள் இந்த காப்பீட்டில் அடங்கியிருக்கும்.
மருத்துவக் காப்பீடுக்கு தகுதியானவர்கள்
ஐந்து வயது முதல் 75 வயது வரை உள்ளவர்கள் அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம். ஒரு சில மருத்துவக் காப்பீடு திட்டங்களுக்கு ஏற்ப இந்த வயது வித்தியாசம் கொஞ்சம் மாறுபடலாம். தனி நபரோ, ஒரு குடும்பத்தாரோ, ஒரு குழுவினரோ சேர்ந்து கூட மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளலாம்.
பல வகைப்பட்ட காப்பீட்டு முறைகள் உள்ளன. அதாவது தனி நபருக்கு, குழுவினருக்கு, குடும்பத்தாருக்கு, முதியவர்களுக்கு, நீண்ட நாட்களுக்கான காப்பீடு, குறிப்பிட்ட நோய்க்கான காப்பீடு, விபத்துக்கான காப்பீடு என பல வகைகளில் உள்ளன.
இவற்றில் ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு ஏற்ற காப்பீட்டினை தேர்வு செய்து காப்பீடு செய்து கொள்வது சிறந்தது.
|