இந்த அவசரகதி வாழ்க்கையில் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட அனைத்தும் தற்போது மனிதனை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில் மருத்துவக் காப்பீடு என்பது அவசியமாகிறது.
போக்குவரத்து நெரிசலும், சுற்றுச்சூழல் மாசும், இயந்திர கதி வாழ்க்கையும் ஒரு மனிதனை எப்போது வேண்டுமானாலும் நோயாளியாக்கும் தகுதிகளைப் பெற்றுள்ளன.
வளர்ந்து வரும் தொழில்நுட்பக் கருவிகளின் உதவியால் எப்படிப்பட்ட பிரச்சினையும் சீர் செய்து விட முடியும். பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய காலம் எல்லாம் மலை ஏறிப் போய், தற்போது நுண் துளை வழியாகவே எத்தனையோ சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
உடல் முழுவதையும் அலசி ஆராயும் சிடி ஸ்கேன், உடல் உள் உறுப்புகள் சேதமடைந்தாலோ, பழுதடைந்தாலோ மாற்று உறுப்பு பொருத்துதல் என மருத்துவ உலகம் விரிவடைந்து கொண்டே போகிறது. பல உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு வருகின்றன.
எல்லாம் சரி... நவீன தொழில்நுட்ப மருத்துவத்தை பெறுவது என்பது சராசரி மக்களுக்கு இயலுமா? சராசரி ஏன்... ஓரளவிற்கு நல்ல நிலையில் இருப்பவர்களே பெரிய பெரிய மருத்துவமனைகளின் கட்டணங்களைப் பார்த்து திணறிப் போய்விடுகின்றனர். அந்த அளவிற்கு மருத்துவக் கட்டணங்கள் உயர்ந்து இருக்கின்றன.
நமக்கு நோய் வந்ததும் அதற்கு எந்த மருத்துவமனை சிறந்தது என்று பார்ப்பதை விட... நமது பொருளாதார பலத்திற்கு எந்த மருத்துவமனை சிறந்தது என்றுப் பார்த்துதானே சிகிச்சையே பெறப்போகிறோம்.
நோய் என்றால் சரி.. எல்லா வற்றையும் விசாரித்துப் பார்த்துவிட்டு போய் சேரலாம். இதுவே விபத்து, எதிர்பாராத பிரச்சினை என்றால்... அந்த நேரத்தில் உயிர்தான் முக்கியம் என்று பெரிய மருத்துவமனை ஒன்றில் சேர்ந்துவிட்டு பின் விழிபிதுங்கி நிற்கும் எத்தனையோ குடும்பங்களைப் பார்க்கிறோம்.
இதையெல்லாம் தவிர்க்கலாம் மருத்துவக் காப்பீடு மூலம். ஆம் தற்போதைய நிலைக்கு ஒவ்வொரு மனிதனும் மருத்துவக் காப்பீடு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
|