கண்புரை நோய்
கண்களில் இருக்கும் விழி ஆடியில் ஒரு படலம் படிந்து பார்வையை மறைப்பதுதான் கண்புரை நோய் எனப்படுகிறது.
கண்புரை நோய் என்பது பெரும்பாலும் வயது மூப்பு காரணமாகவே உண்டாகிறது.
உடலில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்கள், கண்களுக்கு ஏற்படும் காயங்கள், உடலில் உண்டாகும் நோயாலும் கண்புரை உண்டாகிறது. பரம்பரை நோயாகவும் இது உள்ளது.
இது ஆங்கிலத்தில் காட்ராக்ட் என்று அழைக்கப்படுகிறது.
கண்களில் படிப்படியாகப் பார்வை குறைந்து வருவதுதான் கண்புரை நோயின் அறிகுறியாகும். இதற்கு மருந்து, மாத்திரைகள் இல்லை. அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு.
கண்புரை வளரும் தருவாயில் அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. சற்று வளர்ந்த பிறகே அறுவை சிகிச்சை செய்து அகற்றப்படுகிறது.
மேலும் சர்க்கரை நோய் இருப்பவர்களை இந்த கண்புரை நோய் எளிதில் தாக்குகிறது.
கணினியில் பணியாற்றினால்
கணினி முன்பு அமர்ந்து பல மணி நேரங்கள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை இருந்தால் கணினித் திரைக்கு ஆன்டி கிளேர் எனப்படும் ஒரு கண்ணாடியைப் போட்டு வைப்பது நல்லது. இது உங்கள் கண்களுக்கு கண்ணாடிப் போடுவதைத் தவிர்க்கும்.
தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் கணினியைப் பார்ப்பதைத் தவிருங்கள். 20 நிமிடத்திற்கு ஒரு முறை பார்வையை வேறு பக்கம் திருப்புங்கள்.
30 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களை 5 நொடிகள் வரை மூடியபடி இருங்கள். பின்னர் திறந்து 5 நொடிகள் கழித்து மீண்டும் மூடுங்கள். இது போல் ஒரு சில மணி நேரங்களுக்கு ஒரு முறையாவது செய்யுங்கள்.
கணினியைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்போது உங்களது கண்ணில் இருக்கும் நீர்த்தன்மை குறைகிறது. இதனை தவிர்க்க அவ்வப்போது இமைகளை மூடித் திறந்து கொண்டிருங்கள்.
கண்களுக்கு உடற்பயிற்சி இருக்கிறது. அதாவது நல்ல நிலையில் அமர்ந்தபடி கண்களை மேலிருந்து வட்ட வடிவில் கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழற்றுங்கள். இதுபோல 5 முறை தொடர்ந்து செய்வது நல்ல பயற்சியாகும்.
பெண்களுக்கு
மட்டமான மைகளையோ, மை பென்சிலையோப் பயன்படுத்தாதீர்கள்.
இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பு முகத்தை சுத்தமாகக் கழுவிவிடுங்கள். முகத்தில் எந்த மேக்கப்பும் இருக்கக் கூடாது.
|