தேங்காயை வறுத்து அதனுடன் சாதத்தை கொட்டி கிளறுவது எளிதானதுதான். ஆனால் தேங்காய் பாலிலேயே சாதத்தை வேகவைத்து செய்யும் தேங்காய் பால் சாதத்தின் சுவையை ஒரு முறை பார்த்துவிட்டால் மீண்டும் மீண்டும் கேட்கும்.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
தேங்காய் - ஒன்று பச்சரிசி - ஒரு ஆழாக்கு டால்டா - ஒரு குழிக்கரண்டி நெய் - ஒரு குழிக்கரண்டி இஞ்சி, பூண்டு - சிறிதளவு சோம்பு, பட்டை, கிராம்பு - சிறிது புதினா, கொத்துமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு செய்முறை
முதலில் தேங்காயை துருவி, அதனை அரைத்து நன்கு தண்ணீர் விட்டு பால் எடுத்துக் கொள்ளவும்.
அரிசியை கழுவி நீரை வடிகட்டி விட்டு, கொஞ்சமாக நீர் விட்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி ஊற வைக்கவும்.
இஞ்சி, பூண்டு இரண்டையும் தோல் நீக்கி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து டால்டாவை ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதன் பிறகு புதினா, மல்லித் தழைகளைப் போடவும்.
பின்னர் தேங்காய் பாலினை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு மூடி விடவும்.
பால் நன்கு கொதித்தவுடன் ஊற வைத்திருக்கும் அரிசியை கொட்டி நன்கு கிளறி விடவும்.
குக்கராக இருந்தால் இரண்டு விசில் வைத்து இறக்கவும், பாத்திரமாக இருந்தால் அப்படியே 10 நிமிடம் தட்டு போட்டு அதன் மீது கனமானப் பொருளை வைத்து வெந்ததும் இறக்கவும்.
சாதத்தை திறந்ததும் அதன் மீது நெய்யை ஊற்றி சாதம் உடையாமல் கிளறி விடவும். இதற்கு உருளைக் கிழங்கு வறுவல் போன்றவை சரியான இணையாக இருக்கும்.
தேவைப்படுபவர்கள் எடுத்து வைத்திருக்கும் நெய்யில் கொஞ்சமாக விட்டு முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து சாதத்துடன் கடைசியாக சேர்த்துக் கொள்ளலாம்.
|