மாக்கீரை என்றதும் என்னவோ ஏதோ என்று குழம்ப வேண்டாம். புளிப் போட்டு கீரை கடைவதற்கு பதிலாக மாங்காய் போட்டுச் செய்யும் முறை தான் மாக்கீரை. இது ஆந்திராவின் சமையலறை சமாச்சாரமாகும்.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
கீரை - 1 கட்டு மாங்காய் - 1 பூண்டு - முழுதாக வெங்காயம் - 1 தக்காளி - 2 பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு தாளிக்க - கடுகு, எண்ணெய், காய்ந்த மிளகாய்
செய்யும் முறை
கீரையை கடைவதற்கு ஏற்றார் போல் கிள்ளி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
மாங்காயை ஊறுகாய் போடுவதற்கு நறுக்குவது போல் கொஞ்சம் பெரிதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயத்தையும் நறுக்கிக் கொள்ளுங்கள். பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
கீரையை வேக வைக்கும் பாத்திரத்தில் கீரையைப் போட்டு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றுங்கள். அதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், சிறிது மஞ்சள் தூள் போட்டு மூடி வேக வையுங்கள்.
கீரை நன்கு வெந்ததும் அதில் மாங்காய் துண்டுகளைப் போட்டு சிறிது நேரம் வேக விடுங்கள்.
மாங்காய் எளிதில் வெந்து விடும். பின்னர் கீரையை இறக்கி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு கடைந்து கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து கீரையில் ஊற்றுங்கள்.
அவ்வளவுதான் மாக்கீரை தயார். புளிப்பு ருசியும் இருக்கும். ஆனால் புளியும் தேவைப்படாது. இது மாங்காய் சீசனுக்கு ஏற்ற உணவு.
|