பிரிஞ்சி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்றவற்றிற்கு ஏற்ற இணை உணவான கத்திரிக்காய் மசாலா செய்வது எப்படி என்பதை பார்ப்போம். கத்திரிக்காய் மசாலா ஆந்திரவாசிகளின் அருமையான சமையல் முறை.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
கத்திரிக்காய் - 1/4 கிலோ தேங்காய் - அரை மூடி பெரிய வெங்காயம் - 3 புளி - நெல்லிக்காய் அளவு கடுகு - சிறிதளவு உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி எண்ணெய் - 2 மேசைக் கரண்டி உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
சிறிய கத்திரிக்காய்களாக பார்த்து வாங்கி அதனை காம்புகளை நீக்கி விட்டு, கத்தரிக்காயின் கீழ் புறத்தில் இருந்து கீறி விடவும். ஆனால் கத்திரிக்காய் இரண்டு துண்டுகளாக ஆகி விடக் கூடாது, முழுதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். எல்லா கத்திரிக்காய்களையும் அதுபோல் கீறி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
தேங்காயைத் துருவி ஒரு கிண்ணத்தில் தேங்காய்ப்பூ எடுத்துக் கொள்ளவும்.
புளியை கால் டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்து கெட்டியான புளிக் கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளிக்கரைசலில் தேங்காய்ப்பூ, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடேறியதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
அதில் இந்த புளிச்சரைசல் கலவையை கொட்டி, உப்பு சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்.
பிறகு இந்த கலவையைக் கீறி வைத்துள்ள கத்தரிக்காய்களுக்குள் நிரப்பவும்.
பின்னர் வாணிலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மசாலா நிரம்பிய கத்திரிக்காய்களை அடுக்கி வைக்கவும். கத்திரிக்காயை அடுக்கும் போது மசாலா நிரப்பிய பகுதி மேல்புறமாக இருந்தால் மசாலா வெளியே வராது. இத்துடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
கத்திரிக்காய்களுக்குள் வைத்தது போக மீதி இருக்கும் மசாலாவை கத்தரிக்காயின் மீது கொட்டி விட்டு, வாணலியை மூடி மிதமான தீயில் வேகவிடவும்.
அவ்வப்போது கத்திரிக்காய்களை திருப்பி விட்டு எல்லா பாகங்களும் வேகுமாறு பார்த்துக் கொள்ளவும்.
கத்தரிக்காய் வெந்ததும் இறக்கி கொத்துமல்லி, கறிவேப்பிலையை தூவி பரிமாறவும்.
|