முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இந்திய வகைகள்
 
பிஸிபேளா பாத்
Webdunia
இதை பிஸிபேளா ஹுளி அன்னா என்று கர்நாடக தேசத்தில் சொல்வார்கள். பார்க்கப் போனால் இது ஒருவகை சாம்பார் சாதம் தான். ஆனால் நம்மூர் சாம்பார் சாதம் போல் கைக்குக் கிடைத்த முருங்கை, கத்திரி, பீன்ஸ் எல்லாம் போடக் கூடாது. தக்காளி கூடவே கூடாது.

ஹுளி என்றால் கன்னடத்தில் புளி என்று பொருள். பிஸி என்றால் சூடு, சுடச் சுடப் பரிமாறினால் ருசியோ ருசி. இதில் கர்நாடக தேசத்தில் ஒவ்வெரு பிரதேசத்திலும் சிறிது செய்முறை வேறுபடும்.

மேற்கு கர்நாடகத்தில் அதாவது உடுப்பி, கார்வார், பூனா பக்கங்களில் நிறைய கசகசா, கொப்பரை, மராட்டி மொக்கு முதலியவை சேர்ப்பார்கள். மைசூர் பக்கங்களில் கசகசா அவ்வளவாகச் சேர்க்க மாட்டார்கள்.

இந்த மசாலாவை முன்கூட்டியே செய்து வைத்துக் கொண்டால், கடைசி நிமிட டென்ஷன் குறையும். மசாலாப் பொடி மிஞ்சி விட்டால் எந்த ரோஸ்ட் கறிக்கு வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம்.

பிஸிபேளாவை தயிர்ப்பச்சடி, சிப்ஸ், பொறிச்ச அப்பளம், எந்த ரோஸ்ட் கறியுடனும் அல்லது கத்தரிக்காய் ரோஸ்ட், ஸ்டப்டு கறியுடனும் பரிமாறவும்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி-2 டம்ளர்
துவரம் பருப்பு-1 டம்ளர்
உப்பு-தேவையான அளவு
புளி-இரண்டு எலுமிச்சை அளவு

மசாலாபொடி தயாரிக்க

கடலைப் பருப்பு-அரை கப்
கொத்தமல்லி விதை(தனியா)-அரை கப்
காய்ந்த மிளகாய்-8-10
மராட்டி மொக்கு-1
பட்டை-2
கசகசா-1 மேஜைக்கரண்டி
துருவிய கொப்பரை-அரை கப்
(பச்சை தேங்காய் போடக் கூடாது)
வறுக்க எண்ணெய்-கால் கப்

தாளிக்க

நெய்-1 கப்
கடுகு-2 டீஸ்பூன்
கறிவேப்பிலை கொத்தமல்லி கட்டாயம் சேர்க்கக் கூடாது.
மஞ்சள் பொடியும் சேர்க்கக் கூடாது.

காய்கறிகள்

சாம்பர் வெங்காயம்-2 கப்
பட்டாணி-2 கப்
பட்டர் பீன்ஸ்(கிடைத்தால்)-100 கிராம்
காரட்-(கட்டாயமில்லை)

மசாலா தயாரிக்கும் விதம்:

வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன், தனித்தனியாக ஒவ்வொன்றாக பொன்னிறத்தில் வறுக்க வேண்டும். மராட்டி மொக்கு, பட்டை, கொப்பரையெல்லாம் சிவக்க வறுத்தால், டேஸ்ட் மாறி விடும். வாசனை வந்தவுடன் எடுத்து விட வேண்டும்.
கடலைப்பருப்பு, கொத்தமல்லி விதை, காய்ந்த மிளகாய் இவற்றைத் தனித்தனியாகப் பொடித்துக் கொள்ளவும்.
மராட்டி மொக்கு பட்டையைத் தனியாகவும், கசகசாவைத் தனியாகவும் பொடித்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை:

பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
சாம்பார் வெங்காயத்தை உரித்து வதக்கிக் கொள்ளவும்.
வெந்த பட்டாணியையும் வதக்கிக் கொள்ளவும்.
அரிசி, பருப்பு இரண்டையும் கலந்து, அதற்கு இருமடங்கு தண்ணீர் விட்டு, ப்ரெஷர்குக் செய்யவும்.
புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ப்ரெஷர் குக் செய்த பருப்பு, அரிசி, கரைத்த புளி, உப்பு, தயார் செய்த மசாலா முதலியவைகளைச் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.
சாதம் குழையக் கூடாது. (புதிதாக சமையலறைக்குள் நுழைபவர்கள் முதலில் நீர்க்கக் கரைத்த புளி, உப்பு, மசாலாப் பொடி சேர்த்து நன்றாகக் கொதி வந்து, புளி வாசனை போன பிறகு வெந்த அரிசி-பருப்பு சேர்த்தால் சாதம் குழையும் வாய்ப்பு இல்லை).
இப்போது வதக்கிய வெங்காயம், பட்டாணி, வறுத்த கொப்பரை பொடி, பட்டை கசகசா பொடி சேர்த்து கிளறி கடுகு தாளித்துக் கொட்டவும்.
பரிமாறும் முன் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும்
தயிர் ரொட்டி தோசை
புது முறையில் பஜ்ஜி
எழும்பல் அப்பம்
குழி பணியாரம்
மங்களூர் போண்டா
அவல் புளியோதரை