நம்மில் பலருக்கு, விருந்து கொடுப்பதென்றாலே தயக்கமும் பயமும் உடன் வருகிறது. ஐயோ, இத்தனை பேருக்கு சமைப்பதா? எப்படிச் செய்வது என்ன செய்வதென்ற குழப்பம். வரும் வாரங்களில், இத்தகைய தயக்கங்களையும் குழப்பத்தையும் போக்கி, பார்ட்டி மெனு எப்படித் தயாரிப்பதென்று மட்டுமல்லாமல், எப்படி வேலையைப் பகிர்ந்து செய்வதென்றும், எவற்றையெல்லாம் முன்கூட்டியே ரெடி செய்து கொள்வதென்றும் விளக்குகிறேன்.
பார்ட்டி மெனு - 1
தக்காளி சூப் பனீர் டிக்கா பீட்ரூட், உருளை சாலட் மேதி பராத்தா தால் ப்ரை வெஜிடபிள் புலாவ்
6-8 பேருக்குத் தேவையான பொருட்கள் லிஸ்ட் ரெடி செய்ய வேண்டும். அதற்குமுன் கீழ்க்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
1. சாப்பிடும் நபர்களின் டேஸ்ட் தெரிந்து மெனு ரெடி செய்யவேண்டும்.
2. யாரை நாம் விருந்துக்கு அழைத்திருக்கிறோமோ அவர்கள் மிகவும் தெரிந்தவர்களாக இருந்தால் கவலை இல்லை. அவர்கள் காஷுவல் நண்பர்களாகவோ, ஆபீஸ் நண்பர்களாகவோ இருந்தால், மெனுவில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.
3. சிலருக்கு சில காய்கறிகள் அல்லது காளான் வகைகள் அலர்ஜியாகக் கூட இருக்கலாம். இல்லாவிட்டால், பிடிக்காமல் கூட இருக்கலாம். இவற்றை முன் கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம்.
4. மசாலாப் பொடிகள், தாளிப்பு சாமான்கள், எண்ணெய் வகைகள். வீட்டில் இருக்கிறதா என்று இரண்டு நாட்கள் முன்பே சரிசெய்து கொள்ள வேண்டும்.
5. காய்கறிகள் வெட்டி ரெடியாக ப்ரிஜ்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
6. மாவு முதலில் தயார் செய்து சில மணி நேரம் முன்பே வைத்து விட்டால் சப்பாத்தியும் மிருதுவாக இருக்கும். கடைசி நிமிட டென்ஷன் குறையும்.
7. தால்வகைகள் காஸில் கொதிக்கும் போதே, இன்னொரு பக்கம் குக்கரில் காய்கறி வேக வைக்கலாம். இவ்வாறு நேரம், வேலை இவற்றை திட்டமிட்டுச் செய்தால் 1-1/2 மணி-2 மணி நேரத்திற்குள் இத்தனை விருந்தையும் சமைத்து ரெடியாக வைத்து விடலாம்!!
பரிமாறும் முறை
முதலில் சூப், சூப்புடன் பொறித்த ஐட்டம், (Starter) பரிமாறவும். பின், சூப் மீது பொறித்த ப்ரெட் துண்டுகள் தூவிப்பரிமாறவும். பின் சாத வகைகள், சப்பாத்தி, சப்ஜி பரிமாறவும். தயிர், தயிர்பச்சடி, தயிர் சாதம் முதலியவைகளைக் கடைசி ஐட்டமாகக் கொடுக்கலாம். இந்திய வகை உணவாக இருப்பதால், ஸ்வீட் அல்லது பாயசம் முதலிலேயே பரிமாறவும். ஸ்வீட், தயிர் வடை முதலியவைகளை அடுத்த இதழில் பார்க்கலாம்!
|