ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 20 ஏப்ரல் 2024 (12:57 IST)

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைந்ததற்கு இதுதான் காரணமா..?

TN Election
2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் சராசரியாக 69.46% மட்டுமே வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. வாக்குப்பதிவு குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த 2019 பொதுத் தேர்தலில் சுமார் 73% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை வாக்குப்பதிவு குறைந்ததற்கு பல்வேறு காரணங்ளும் கூறப்படுகின்றன. சென்னை போன்ற நகரங்களில் உள்ள வேற்றுத் தொகுதி மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க போதுமான போக்குவரத்து வசதி இல்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 
 
மேலும் பயணச் செலவுகள் குறித்த தயக்கத்தாலும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்லவில்லை. இம்முறை தேர்தல் நாள் வார இறுதியில் வந்ததால் சென்னை உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பங்களுடன் படையெடுத்துவிட்டதும் வாக்குப்பதிவு குறைய காரணமாக கூறப்படுகிறது.
 
இத்துடன் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முழு அளவில் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இவை தவிர லட்சக்கணக்கானவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு இருப்பதும் வாக்குப்பதிவு குறைந்ததற்கான மற்றொரு காரணமாக தெரிகிறது.

தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் உள்ளூர் பிரச்சனைகளை வலியுறுத்தி மக்கள் தேர்தல் புறக்கணித்து இருந்ததும் வாக்குப்பதிவு குறைய காரணமாகும். இவற்றுடன் தமிழ்நாடு முழுவதுமாக வறுத்தெடுத்து வரும் வெப்பமும் ஒரு பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது. 

 
தேர்தல் நாளில் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு மிக மந்தமாக இருந்ததை பல்வேறு தரவுகளும் சுட்டிக் காட்டி உள்ளன.