1. இதர வாசிப்பு
  2. »
  3. வெப்துனியா சிறப்பு
  4. »
  5. சுதந்திர தினம்
Written By Webdunia

'ஜெய் ஹிந்த்' செண்பகராமன்!

முதல் உலகப் போர் நடந்காலக்கட்டத்தில் பிரிட்டிஷாரை நடுங்கச் செய்த ஒரு சொல் என்றால், அது 'எம்டன்'தான். கப்பற்படைப் போரில் தங்களஎவராலும் வெல்ல முடியாது என்ற கொட்டத்தை அடக்கிய ஜெர்மெனியின் போர்க் கப்பலே 'எம்டன்'.

கண்ணிமைக்கும் நேரத்தில் குண்டுமழைப் பொழிந்துவிட்டு, கண்ணெட்டா தூரத்தில் சென்று மறையும் இந்நீர்மூழ்கிக் கப்பல், சீன கடற்பகுதி வழியாக இந்தியக் கடல் எல்லையில் நுழைந்து 1914-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியன்று பிரிட்டிஷ் பிடியில் இருந்த இந்தியாவின் சென்னையைக் குறிவைத்து குண்டுகளை வீசியது.

சென்னைத் துறைமுகத்திலமுதல் குண்டு விழுந்தது. அடுத்த குண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தின் அருகவிழுந்து வெடித்தது. இதில், அங்குள்ள பலமான சுற்றுச் சுவர் அடியோடு பெயர்ந்தவிழுந்தது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையை குறிவைத்தவீசப்பட்குண்டு, வெடிக்காமல் மணலில் புதைந்தது!

இந்தத் தாக்குதலைக் கண்ட பிரிட்டிஷ் கப்பற்படை, பதில் தாக்குதல் நடத்துவதற்குள் மின்னலென மறைந்தது 'எம்டன்'.

webdunia photoFILE
இந்த நிகழ்வு, இந்திய சுதந்திரப் போர் வரலாறு அறிந்த அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், அந்த எம்டனுக்கு வழிகாட்டியாக வந்த இந்திய வீரர், தமிழகத்தைச் சேர்ந்த செண்பகராமனைப் பற்றி முழுமையாக அனைவருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே!

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப்படை உருவாக தூண்டுதலாக இருந்தவர் செண்பகராமன் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இத்தகைய சிறப்பு மிக்க இவரது இந்திய சுதந்திரப் போராட்ட வாழ்க்கை, வெளிநாட்டில் இருந்தவண்ணமே நடந்து வந்ததால்தான், பலரையும் சென்றடையாமல் இருக்கிறது போலும்.

வேந்தர் கெய்சருடனான நட்பு!

சின்னசாமிப்பிள்ளை, நாகம்மாள் தம்பதியருக்கு மகனாக குமரியில் பிறந்து திருவனந்தபுரத்தில் வளர்ந்த செண்பகராமன் தனது பள்ளிப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க ஆரம்பித்தார். அப்போது, அவரது நடவடிக்கைகளை உற்று நோக்கினார் சேர் வால்டர் வில்லியம் ஸ்ரிக்லாண்ட் என்ற ஜெர்மெனி நாட்டு உளவாளி.

செண்பகராமனின் ஆளுமையை உணர்ந்த ஜெர்மென் உளவாளியின் அறிவுரையாலும், உதவியினாலும் வெளிநாட்டில் இருந்துகொண்டே இந்திய விடுதலைக்குப் பாடுபடத் தொடங்கினார். இத்தாலியில் இலக்கியம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் பயின்றார். சுவிட்சர்லாந்துக்குச் சென்று அங்கும் படித்தார். அங்கிருந்து ஜெர்மனியின் தலைநகரான பெர்லினுக்குச் சென்ற அவர், அங்கு பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

அதன்பின் ஜெர்மெனியிலேயே தங்கிய அவர், 'இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி' மூலம் தாய் நாட்டு விடுதலைக்கு ஆதரவு திரட்டத் தொடங்கினார். ஜெர்மனி வேந்தரகெய்சரின் நட்பு கிடைத்தது. 1930-ல் இந்திய வர்த்தக சபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியானார்.

நேதாஜியுடன் 'ஜெய்ஹிந்த்' செண்பகராமன்!

1933-ல் ஹிட்லர் ஜெர்மெனி ஆட்சிபீடமஏறிபின்னர், அவருடனும் ஓரளவு நட்பு இருந்த போதிலும், பாதகமான சூழலே நிலவத் தொடங்கியது. அதே ஆண்டில் வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டில் சுபாஷ் சந்திர போஸை சந்தித்தார். அப்போது, அவர் தனது திட்டம் ஒன்றை போஸிடம் தெரிவித்தார். செண்பகராமன் தொடங்கிய 'இந்திய தேசியத் தொண்டர் படை'திட்டம், நேதாஜியின் இந்திய தேசியப் படைக்கு வழிவகை செய்தது.

நேதாஜியுடனான சந்திப்பின்போது, வழக்கமாக தான் சொல்கின்ற 'ஜெய் ஹிந்த்' என்றச் சொல்லை உதிர்த்தார் செண்பகராமன். இந்தச் சொல்லின் காந்த சக்தியில் ஈர்த்த நேதாஜி, இதனை தனது 'மந்திரச் சொல்'லாக்கிக் கொண்டார்.

அந்தக் காலக்கட்டத்தில் ஜெர்மெனி வருகை தரும் இந்தியத் தலைவர்கள், செண்பகராமனின் இல்லத்துக்குச் செல்லாமல் திரும்பியதில்லை. கென்யாவில் இவரது உரையைக் பற்றி அறிந்த காந்திஜி, வெகுவாக பாராட்டியுள்ளார். அதேபோல், ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில், 'நாஜிகளுடன் கலந்து, சற்றும் பயமின்றிப் பணிபுரிந்த சொற்ப இந்தியர்களில் செண்பகராமன் முதன்மையானவர்' என்று புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

ஹிட்லர் கேட்ட மன்னிப்பு ; 'நாஜி'க்கள் அடைந்த கோபம்!

ஒருமுறை ஹிட்லர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, 'சுதந்திரம் பெறக்கூடிய தகுதி இந்தியர்களுக்கு கிடையாது' என்று சொன்னார். இதைக் கேட்ட செண்பகராமன் வெகுண்டெழுந்து, இந்தியாவின் பாரம்பர்யத்தைப் பற்றியும், இந்தியத் தலைவர்களின் திறனைப் பற்றியும் மூச்சுவிடாமல் பொடிபட பேசி ஹிட்லரை திக்குமுக்காடச் செய்தார்.

செண்பகராமனின் வாதத்தைக் கேட்ட ஹிட்லர், தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், எழுத்துப்பூர்மாக மன்னிப்பு கேட்குமாறு கூறினார் ராமன். அங்ஙனமே எழுத்துப் பூர்வமாக மண்டியிட்டார் ஹிட்லர்.

ஏற்கெனவே, நாஜிக்களின் கோபத்துக்கு ஆளாகியிருந்த செண்பகராமனுக்கு, இந்தச் சம்பவம் மேலும் சினத்தை அதிகப்படுத்தியது. வஞ்சம் கொண்ட நாஜிக்கள், கொலை முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றனர்.அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி, உணவில் விஷம் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றனர். 1934-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி, அவரது அன்பு மனைவி லட்சுமி பாயின் மடியில் உயிர் துறந்தார் செண்பகராமன்.

அவர் மரணமெய்து முப்பத்திநான்கு ஆண்டுகளுக்குப் பின், இந்தியாவின் முதலாவது யுத்தக் கப்பலான 'ஐ.என்.எஸ் டெல்லி'யின் மூலம் டாக்டர் செண்பகராமனின் அஸ்தி பம்பாயிலிருந்து எர்ணாகுளத்திற்கு 1966-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி கொண்டு வரப்பட்டு, ‘சுதந்திர பாரதத்தின் வயல்களிலும் கரமனை ஆற்றிலும் எனது அஸ்தி தூவப்பட வேண்டும்' என்ற மாவீரன் செண்பகராமனின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.

'சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்' என்று ஜெர்மன் மன்னர் கெய்சர் விருப்பம் தெரிவித்திருந்தார் என்றால், அவரது விடுதலைப் போராட்ட ஈடுபாட்டுக்கும், திறமைக்கும் இதைவிட மிகச் சரியான சான்று வேறேனும் உண்டோ!

'ஜெய்ஹிந்த்' செண்பகராமனை நினைவுகூறும் இவ்வேளையில், இவரையும், இவரைப்போன்ற போதிய அளவில் அறியப்படாத; தியாகத் திருவிளக்குகளாய் திகழும் பல விடுதலைப் போராட்ட வீரர்களை, சரித்திரத்தில் பதிவு செய்ய முயன்ற 'ரகமி' போன்ற வரலாற்று ஆசிரியர்களையும் இங்கே நினைவுகூறுவது பொருத்தமாக இருக்கும்.