திருப்பாவை பாசுரம் பாடல் - 15


Sasikala| Last Modified வியாழன், 31 டிசம்பர் 2015 (05:00 IST)
திருப்பாவை பாசுரம் பாடல் - 15
 
'எல்லே இளங்கிளியே; இன்னம் உறக்குதியோ?'
'சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்'
'வல்லை உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!'
'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக'
'ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறுடையை?'
'எல்லாரும் போந்தாரோ?' போந்தார், போந்தெண்ணிக்கொள்;
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

 
 
பொருள் :
 
வீட்டிற்குள் வெளியே இருக்கும் பெண்ணும், உள்ளே இருக்கும் பெண்ணும் பேசுவதாக அமைந்த பாடல். கேள்வியும், பதிலுமாகச் சேர்ந்து வரும் அற்புதமான பாடல்.
வெளியே இருப்பவள் : இளங்கிளி போன்றவளே! இன்னும் தூங்குகின்றாயா என்ன?
 
உள்ளே இருப்பவள்: நங்கைகளே! 'சிலுசிலு' வென்று கூப்பிடாதீர்கள். இதோ வந்து விடுகிறேன்.
 
வெளியே இருப்பவள்: திறமைசாலிதான் நீ. உன் பேச்சுத்திறமை, எங்களுக்கு ஏற்கனவே தெரியும்.
 
உள்ளே இருப்பவள்: நீங்கள்தான் திறமைசாலிகள். நீங்கள் சொல்வது போலவே இருந்து விட்டுப் போகிறேன். (இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?)
 
வெளியே இருப்பவள்: சீக்கிரமாக எழுந்து வா. உனக்கு மட்டும் தனியாக, வேறு என்ன அதிசயம் இருக்கிறது?
 
உள்ளே இருப்பவள்: எல்லோரும் வந்து விட்டார்களா?
 
வெளியே இருப்பவள்: வந்துவிட்டார்கள். நீயே வெளியில் வந்து எண்ணிக்கொள்.
 
(உள்ளே இருப்பவள், எதற்காக வெளியே வரவேண்டும்?)
 
குவலயாபீடம் என்னும் பலம் மிகுந்த யானையைக் கொன்றவனும், விரோதிகளான கம்சன் முதலானவர்களை அழித்தவனும், மாயங்கள் செய்வதில் வல்லவனும்-ஆன கண்ணபிரானைப் பாட வேண்டும். 
 இதில் மேலும் படிக்கவும் :