தொலைக்காட்சிகளில் ஆபாச காட்சிகள் மற்றும் வன்முறை காட்சிகளை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றி பதில் தருமாறு மத்திய அரசுக்கு தாக்கீது அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் 4 பேர் சேர்த்து பொதுநலன் கருதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அனைத்து தரப்பு மக்களும் தொலைக்காட்சியை பொழுது போக்குக்காக பார்க்கிறார்கள். செயற்கைகோள் (சாட்டிலைட்) நெட்வொர்க் மூலம் மத்திய தணிக்கையோ, சுய கட்டுப்பாடோ இல்லாமல் தொலைக்காட்சிகள் ஒளிபரப்புகின்றன. இப்படி பலதரப்பினர் பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஆபாச காட்சிகள், வன்முறை காட்சிகள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற காட்சிகளினால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதுடன், குடும்ப உறவு, மாமியார், மருமகள் உறவு போன்றவை சீர்குலையும். எனவே சமுதாய நலன்கருதி இதுபோன்ற காட்சிகளை தடை செய்யவேண்டும் என்று சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தாக்கீது அனுப்பினோம். திருமண வாழ்க்கை முடிவுகள் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொலைக்காட்சியில் வரும் தேவையில்லாத காட்சிகளை பார்ப்பது மூலம் பலர் விவாகரத்து செய்யும் அளவிற்கு மனநிலை பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளின் மனநிலையையும் பாதிக்கிறது.
ஆகவே, இவற்றை தடை செய்யவேண்டும் என்று சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளுக்கு தாக்கீது அனுப்பப்பட்டது. 2 தொலைக்காட்சிகள் மட்டுமே பதில் அளித்தன. ஆனால் அந்த பதில் திருப்தியாக இல்லை. எனவே தேவையில்லாத, விரும்பத்தகாத காட்சிகளை ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி டி.முருகேசன் ஆகியோர் விசாரித்தனர். இதுபற்றி பதில்தருமாறு மத்திய அரசு, மத்திய சினிமா தணிக்கைத்துறை, பிரச்சார்பாரதி நிஜாம் ஆகியவை 4 வாரத்தில் பதில் தரும்படி தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.