எந்த கலப்படமும் இன்றி மலையின் மூலிகைகளை மட்டுமே தன்னகத்தேக் கொண்டு அருவியில் கொட்டும் அந்த நீரின் தூய்மைக்கு அளவுகோலும் உண்டோ. சுத்தமான நீர் என்பதால் எந்த பயமும் தேவையில்லை. ஆனால் பாறைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
வாரம் முழுவதும் அலைந்து திரிந்து உழைப்பவர்கள் இந்த ஒடையில் (அப்பகுதியில் உள்ள 40 கிராமங்களுக்கு இதுதான் குடிநீர் அளிக்கிறது) குளித்தால் உடல் அசதி விலகும். உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும். அனுபவிப்போம் என்று நினைத்துக்கொண்டு எக்காரணம் கொண்டும் அங்கு மது அருந்தாதீர்கள். போதையில் அந்த அமைதியான சூழலை உங்களால் அனுபவிக்க முடியாமல் போய்விடும்.
அந்த அருவிக்கு சற்று முன் ஒரு மரத்தடியில் சிவ லிங்கம் ஒன்று இருக்கும். மிக சக்தி வாய்ந்த இடமாகும். சித்திரை பெளர்ணமி தினத்தன்று அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து அந்த லிங்கத்தை வணங்கி விட்டுச் செல்வார்கள்.
இவ்விடம் ஸ்ரீ காளஹஸ்தி என்றழைக்கப்படும் சிவபெருமானின் புண்ணியத் தலத்திற்கு அருகிலுள்ளது. எனவே இவ்விடத்தை தென்னாட்டில் உள்ள மிகப் பெரிய தபோ வனம் என்று கூறுவார்கள். எனவே தூய்மையுடன் இருப்பது சிறந்தது.
இங்கு என்னற்ற மூலிகைச் செடிகளும், சில பறவையினங்களும், சிறு சிறு பூச்சிகளும், வண்டினங்களும் உள்ளன. இரவு தங்குபவர்கள் காட்டின் அற்புத ராகங்களையெல்லாம் காசு கொடுக்காமல் கேட்கலாம். இங்கு பொழுது விடிவதைக் காண்பது தனி அனுபவம், சுகம்.
குடும்பம், நண்பர்களோடு செல்பவர்கள் எவ்வளவு ஆட்டம் போட்டாலும் சரி மாலை 3 மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பிவிடுவது நல்லது. அப்போதுதான் இருட்டுவதற்குள் நீங்கள் வனப்பகுதியை கடந்து நகர்ப்பகுதிக்கு வந்து விட முடியும்.
கொஞ்சம் சிரமமான பயணம்தான் என்றாலும், வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் இந்த தடா நீர்வீழ்ச்சி.
முக்கியமான தகவல்
15 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே இங்கு செல்வது நல்லது.
காலை 6 அல்லது 7 மணிக்கெல்லாம் நீங்கள் சென்னையில் இருந்து புறப்பட்டுவிட வேண்டும். அங்கு எந்தவிதமான கடைகளும் இருக்காது. எனவே உணவுப் பொருட்களை நீங்களே எடுத்துச் செல்வது நல்லது.
தடா நீர்வீழ்ச்சியைக் காணச் செல்பவர்கள் அதிக கனமானப் பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கலாம். உணவு, தேவையான அளவு குடிநீர், முதல் உதவிப் பொருட்கள், மாற்றிக் கொள்ள எளிதான உடை மட்டுமேப் போதும். ஏனெனில் அவ்வளவு தூரம் சுமந்து செல்ல வேண்டியது நீங்கள்தான். எனவே சுமையைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
எப்போது, எவ்வாறு செல்லலாம்?
பொதுவாக மழைக் காலம் முடிந்து கோடைக் காலம் துவங்கும்போது இங்கு செல்வது உகந்தது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகியவை ஏற்ற மாதங்களாகும்.
சொந்த வாகனத்தில் மட்டுமே செல்ல வேண்டும். வேறு வழியே இல்லை.
தடா நீர்வீழ்ச்சி செல்லுங்கள்... மனதை விட்டு என்றென்றும் நீங்காத பசுமையான காட்சிகளை அள்ளிக் கொண்டு வாருங்கள்.
|