இந்தியாவின் தேசிய விலங்கு புலி. ஆனால் இந்த புலிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் குறைந்து கொண்டே வந்து தற்பொது வெறும் 1,300 புலிகளே எஞ்சியுள்ளன என்றால் அதை நம்பமுடிகிறதா?
நம்பித்தான் ஆகவேண்டும் என்கிறார் பிரபல வனப்பாதுகாப்பு நிபுணர் வால்மிக் தாப்பர்.
2002 ஆம் ஆண்டு புலிகளின் காலடித் தடங்களை கணக்கெடுத்து சுமார் 3,600 புலிகள் எஞ்சியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த கணக்கெடுப்பு பிறகு அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய ஆய்வுத் தகவலின்படி பார்த்தால் இந்தியாவில் புலிகள் இனம் இன்னமும் சில நாட்களில் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது என்று வால்மிக் தாப்பர் எச்சரித்துள்ளார்.
தற்போதைய ஆய்வை நடத்திய குழுவின் தலைவர், இந்திய வனவிலங்குகள் உயிரியல் ஆய்வில் உள்ள குறிப்பிடத்தகுந்த சிலரின் பட்டியலில் உள்ள டாக்டர் ஜே.வி. ஜலா என்பவர்.
இந்திய வனவிலங்குக் கழகத்திலிருந்து சிலர் மற்றும் பயிற்சி பெற்ற வன அதிகாரிகள் ஆகியோர் டாக்டர் ஜே.வி. ஜலா தலைமையில் இந்த மாரத்தான் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
இந்தக் குழு இந்திய வனங்களில் 352,000 மனித நாட்களை செலவழித்துள்ளது, 21,989 வனங்களில் நுழைந்து மாதிரிகளை சேகரித்துள்ளது, இதற்காக 1,32,000 கி.மீ. தூரத்தை கால் நடையாக கடந்து சென்றுள்ளது.
புலால் உண்ணும் பாலூட்டியின அடையாளங்கள் உள்ள 3,30,000 கிமீ தூரத்தை பிரயாணித்துள்ளது இந்தக் குழு.
முதலில் இவர்கள் புலிகள் அதிகமாக புழங்கும் இடம், சுமாராக புழங்கும் இடம் மற்றும் குறைவாக புழங்கும் இடம் என்று வரைபட மாதிரிகளை உருவாக்கியுள்ளனர், பிறகு தாங்கள் சேகரித்த புலிகள் புழக்க தடங்களின் மாதிரிகள் சேகரித்த அனைத்து இடங்களிலும் காமிராக்களை வைத்து கண்காணித்தனர். இதன் மூலம் இந்திய வனங்களில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையை இவர்கள் கனகச்சிதமாக விஞ்ஞானப்பூர்வமாக நிர்ணையித்துள்ளனர்.
இந்த புதிய கணக்கீடுகளின் உதவியுடன் புலிகள் அதிகம் வசிக்கும் வனப்பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் புலிகள் மேலும் அழியாமல் தடுப்பதுடன் அதன் இனத்தை பெருக்கவும் வழி வகை செய்ய முடியும் என்கிறார் வனப்பாதுகாப்பு நிபுணர் வால்மிக் தாப்பர்.
|