8 புதிய ரயில்கள் விரைவில் இயக்கப்படும் - தெற்கு ரயில்வே

சனி, 31 அக்டோபர் 2009( 11:08 IST )
ராமேசுவரம் - கன்னியாகுமரி இடையே அதிவேக ரயில் உள்பட 8 புதிய ரயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை, புறநகர் ரயில்வே கால அட்டவணைகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், ராமேசுவரம் - கன்னியாகுமரி இடையே வாராந்திர அதிவேக ரயில் உள்பட 8 புதிய ரயில்கள் விரைவில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நெல்லை - பிலாஸ்பூர் இடையே விரைவில் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. பிலாஸ்பூரில் இருந்து செவ்வாய்கிழமைதோறும் காலை 8.10 மணிக்கு புறப்படும் வாராந்திர ரயில் (2787) வியாழக்கிழமை காலை 5.05 மணிக்கு நெல்லையை வந்தடையும்.
இதேபோல், நெல்லையில் இருந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் இரவு 12.15 மணிக்கு புறப்படும் வாராந்திர ரயில் (2788) மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 9.35 மணிக்கு பிலாஸ்பூரை சென்றடையும்.
நெல்லை - ஹபா இடையே வாரம் இருமுறை ரயில் இயக்கப்படுகிறது. ஹபாவில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் ரயில் (2998), ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு நெல்லையை வந்தடையும்.
இதேபோல், நெல்லையில் இருந்து திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில் (2997), புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 2.10 மணிக்கு ஹபாவை சென்றடையும்.
ராமேசுவரம் - கன்னியாகுமரி இடையே வாரம் 3 முறை அதிவேக ரயில் இயக்கப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து சனி, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு புறப்படும் ரயில் (2789), ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 4.05 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது.
இதேபோல், கன்னியாகுமரியில் இருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் (2790), திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 5.20 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடையும்.
கோவையில் இருந்து சோரனூர் இடையே ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து வார நாட்களில் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து தினமும் காலை 9.45 மணிக்கு புறப்படும் ரயில் (605), மதியம் 12.35 மணிக்கு சோரனூரை சென்றடைகிறது.
இதேபோல், சோரனூரில் இருந்து தினமும் மதியம் 2.45 மணிக்கு புறப்படும் ரயில் (606), மாலை 5.30 மணிக்கு கோவையை வந்தடையும். மேலும், சோரனூர் - நிலாம்பூர், எஸ்வந்த்பூர் - கொச்சுவேலி, மட்கான் - எர்ணாகுளம், மங்களூர் - கொச்சுவேலி இடையேயும் வாராந்திர ரயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.
மேலும், 6 ரயில்களின் தூரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மங்களூரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வாரம் ஒருமுறை (திங்கட்கிழமை) இயக்கப்படும் விரைவு ரயில் புதுச்சேரி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதேபோல், ஜம்முதாவி - மதுரை - ஜம்முதாவி வாரம் 2 முறை இயக்கப்படும் விரைவு ரயில் நெல்லை செல்வதற்கு இணைப்பு ரயிலாக நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில் விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
எர்ணாகுளம் - திருச்சி - எர்ணாகுளம் தினசரி விரைவு ரயில் நாகூர் வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருவனந்தபுரம் - எர்ணாகுளம் இடையே தினசரி இயக்கப்படும் ஜனசதாப்தி விரைவு ரயில் கோழிக்கோடு வரையிலும், எஸ்வந்த்பூர் - மங்களூர் சென்டிரல் - எஸ்வந்த்பூர் தினசரி விரைவு ரயில் கண்ணூர் வரையிலும், எர்ணாகுளம் - ஜெய்ப்பூர் - எர்ணாகுளம் வாராந்திர விரைவு ரயில் ஆஜ்மீர் வரையிலும் நீட்டிக்கப்படுகிறது.