சுற்றுச்சூழலை பாதுகாக்க சுற்றுலாத்தலங்களுக்கு பாலித்தீன் பைகளை கொண்டு செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையில் சுற்றுச்சூழல் சுற்றுலா பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான தொடக்கவிழா நேற்று காலை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் நடைபெற்றது தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி கலந்து கொண்டு சுற்றுச்சூழல் சுற்றுலா பிரிவை தொடங்கிவைத்தார்.
விழாவில் அவர் பேசுகையில், தமிழகத்தை பொருத்தவரை பண்டை காலம் தொட்டே சுற்றுச்சூழலுடன் இணைந்த வாழ்க்கை பண்பாடாக இருந்து வந்தது. நெய்தல், முல்லை, மருதம், பாலை, குறிஞ்சி ஆகிய 5 வகை நிலங்களில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாத நிலை இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுவருகிறது.
தமிழகத்தில் மலைகள், அருவிகள், வனவளங்கள் ஆகியவற்றிற்கு சுற்றுப்புற சூழல் சுற்றுலாவிற்காக இளைஞர்களை அழைத்துச்செல்வது இந்த சுற்றுலா பிரிவின் நோக்கமாகும். வனத்துறையுடன் இணைந்து இந்த பிரிவு ஒருங்கிணைந்து செயல்படும்.
தமிழ்நாட்டில் இல்லாத இயற்கை வளங்களே இல்லை என்று சொல்லலாம். ஊட்டியில் எல்லா இடங்களையும் பெரும்பாலானவர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். ஸ்காட்லாந்து பனிசிகரத்தை தவிர அனைத்து சூழ்நிலையும் இங்கு உள்ளது. ஊட்டியில் வெஸ்டர்ன் காட்ச்மென்ட், மேல் பவானி போன்ற பல பகுதிகள் மிக ரம்யமாக இருக்கும். ஏலகிரி மலை சிறந்த சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது.
நகர்ப்புறத்திலும் பூங்காக்களில் இசை இசைக்கப்படுகிறது. பழங்கலைகள் அழிந்துவிடாமல் இருக்க அவை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி குளங்கள், ஏரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் தூய்மையாக பராமரிக்கவும் இந்த சுற்றுச்சூழல் சுற்றுலாப்பிரிவு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். பல்வேறு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரங்களையும் இந்த பிரிவு நடத்த உள்ளது.
சுற்றுலாத்தலங்களுக்கு பாலித்தீன் கைப்பைகளை பொதுமக்கள் மட்டுமல்ல யாரும் கொண்டு செல்லாதீர்கள். அரசு என்னதான் திட்டங்கள் தீட்டினாலும் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பலர் அதை கடைப்பிடிப்பதில்லை. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற பயிற்சி அதிகாரிகள் நீலகிரி மலைக்கு மலை ஏறும் பயிற்சிக்கு வந்தனர். அவர்கள் அந்த இடங்களை பார்த்துவிட்டு இப்படி இடம் தமிழ்நாட்டில் இருக்கிறதா என்று வியந்தனர்.
தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சி கழக விடுதிகளில் கடைப்பிடிக்கவேண்டிய சுற்றுப்புறச்சூழல் தரங்களை நிர்ணயிப்பதும் அவற்றை முறையாக கண்காணிப்பதும் இந்த பிரிவின் பணியாகும். அதுதவிர சுற்றுச்சூழலை சிறப்பாக பேணும் விடுதிகளுக்கு ஆண்டு தோறும் விருது வழங்கப்படும். சுற்றுச்சூழலை எங்கும் எதிலும் பாதுகாப்போம் என்று அவர் கூறினார்.
நிகழ்ச்சியல் பேசிய சுற்றுலாத்துறை செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா செல்ல விரும்பும் பொதுமக்கள் எங்களை அணுகினால் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும். குறைந்தபட்சம் 18 பேர்கள் இருக்க வேண்டும் என்று தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. இது பற்றிய முழுவிவரம் விரைவில் வெளியிடப்படும். முதல்கட்டமாக சேர்வராயன் மலையில் மலை ஏறுவதற்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.