தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் கேரளத்திலுள்ள கோவளம் கடற்கரை முக்கியமானதாகும்.
கோவளம் கடற்கரைக்கு தற்போது பல்வேறு இடங்களில் இருந்தும் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றனர். கோவளம் கடற்கரையை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். அவை கலங்கரை விளக்கம், ஹவாய் கடற்கரை, சமுத்திர கடற்கரை என்பவையாகும்.
பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் மரங்களை அதிகம் காண முடியாது. கடற்கரையில் இருந்து வெகு தொலைவில்தான் ஒரு சில மரங்கள் இருக்கும். ஆனால் கோவளம் கடற்கரைக்கு என ஒரு தனி சிறப்பாக கடற்கரையை ஒட்டி ஒருங்கே வளர்ந்துள்ள எண்ணற்ற தென்னை மரங்களைக் காணலாம்.
கடற்கரைக் காற்றும், தென்னையின் குளிர்ச்சியும் சேர்ந்து நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது.
கோவளக் கடற்கரையின் சிறப்பே, அது கடல் அலைகள் அற்ற கடற்கரை என்பதுதான். ஆழம் குறைவான, அலைகளற்ற, மிக நிதானமாக எழும்பி அமிழும் கடலில் ஆபத்தின்றி குளித்து விளையாடலாம்.
கடற்கரைக்குச் சென்றதும் நமது பொருட்களை எல்லாம் பத்திரமாக ஓரிடத்தில் வைத்துவிட்டு கடலை நோக்கிச் செல்லலாம். கோவளம் கடலில் இறங்கிவிட்டால் மீண்டும் கரை திரும்பவே மனம் வராது. அந்த அளவிற்கு அங்கு வரும் காற்றின் வேகமும், நீரின் குளிர்ச்சியும் நம்மை கட்டிப் போட்டு வைக்கும்.
சரி இந்த கடற்கரை மணல் எல்லாம் வேண்டாம், தண்ணீரிலும் நனைய வேண்டாம், கடற்கரைக் காற்றை சுவாதித்தால் போதும் என்று சொல்பவர்களுக்கும் கோவளம் சிறந்த இடம்தான்.
|