இந்த ஆண்டு ஹஜ் பயணம் துவங்கியுள்ள நிலையில், இந்திய ஹஜ் பயணிகள்தான் முதன் முதலாக சவுதி அரேபியா சென்றுள்ளனர். மேலும், பன்றி காய்ச்சல் நோய்க்கான அறிகுறி இல்லை என்று சான்றிதழ் பெற்றால்தான் ஹஜ் பயணம் செல்ல முடியும் என்று வக்ஃபு வாரிய உறுப்பினர்-செயலர் கே.அலாவுதீன் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சவூதி அரசின் முடிவின்படி, 2009-ம் ஆண்டு ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்பவர்கள், பன்றி காய்ச்சல், இன்புளுயன்சா தொடர்பான அறிகுறிகள் ஏதுமில்லை என்ற சான்றிதழ் பெற்ற பின்னரே புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
எனவே, சென்னை மாநகராட்சியை சார்ந்த மருத்துவ அலுவலர்கள் மூலம், ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளுக்கும் தங்கள் பயணம் குறித்த ஆவணங்களை அளிக்கும் முன்னர் சென்னை, சூளைமேட்டில் அமைந்துள்ள ஹஜ் இல்லத்தில் இந்நோய்களுக்கான அறிகுறிகள் குறித்த மருத்துவ பரிசோதனை, ஆய்வு மேற்கொண்டு உரிய படிவத்தில் சான்றிதழ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, அரசு மருத்துவர்கள் முன் ஆஜராகி பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏதுமில்லை என உரிய படிவத்தில் சான்றிதழ் பெற்றால் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். அவ்வாறு பெறாதவர்களின் புனிதப்பயணம் ரத்து செய்ய நேரிடும்.
ஹஜ் பயணிகள் அவரவர்களுக்காக குறிப்பிடப்பட்ட நாட்களில் ஹஜ் இல்லத்தில் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்வதற்கான ஆவணங்களை பெற்றுக்கொள்ளும் முன்பு அங்குள்ள மருத்துவ அலுவலர்களிடம் மருத்துவ பரிசோதனை, ஆய்வு மேற்கொண்டு உரிய படிவத்தில் சான்றிதழை தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மருத்துவர்களினால் பன்றி காய்ச்சலுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உரிய படிவத்தில் சான்றிதழ் பெறாத புனிதப்பயணிகள் கண்டிப்பாக விமான பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும், சிரமங்களுக்கும் மாநில ஹஜ் குழு பொறுப்பாகாது. எனவே புனிதப்பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் அவரவர்களுக்கு குறிப்பிடப்பட்ட நாட்களில் பன்றி காய்ச்சல் குறித்த மருத்துவ பரிசோதனை, ஆய்வு மேற்கொண்டு இந்நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என உரிய படிவத்தில் சான்றிதழ் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.