ஒருவருக்கு ரூ.300 செலுத்தி விரைவு தரிசனத்தில் இறைவனை தரிசிக்கும் முறை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால், தற்போது நடைமுறையில் உள்ள சுதர்சன, செல்லார், அனந்த அர்ச்சனை தரிசன டிக்கெட் முறைகள் ரத்தாகின்றன.
திருப்பதி - திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் ஆதிகேசவலு நாயுடு தலைமையில் திருமலை அன்னமய்யா பவனில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதிகேசவலு நாயுடு, ஏழுமலையானை தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தினமும் திருமலை வருகின்றனர். திருப்பதியில் ஏராளமானோர் ஒரே சமயத்தில் குவிவதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த தாமதத்தை தவிர்க்கும் வகையில் வரும் அக்டோபர் 1 முதல் சீக்கிர தரிசனம் (விரைவு தரிசனம்) டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் கட்டணம் ரூ.300. இதன் காரணமாக திருப்பதி தேவஸ்தானம் தற்போது வழங்கி வரும் சுதர்சன டிக்கெட் ரூ.50, செல்லார் டிக்கெட் ரூ.100, அனந்த அர்ச்சனை தரிசன டிக்கெட் ரூ.200 ஆகியவை வரும் 1ம் தேதி முதல் ரத்தாகிறது. 1ம் தேதி முதல் சேவா டிக்கெட்டுகள், இலவச தரிசனம், சீக்கிர தரிசனம் ஆகியவற்றின் மூலம் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க முடியும்.
தற்போது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் வாரத்திற்கு ஒரு நாள் (செவ்வாய்க்கிழமை) சக ஸ்ர கலசாபிஷேகம் சேவா டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சகஸ்ர கலசாபிஷேக டிக்கெட்டுகள் வழங்க பரிசீலிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.