சென்னையை அடுத்து வேளச்சேரிக்கு செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ தண்டீஸ்வரர் திருக்கோயிலாகும்.
இந்த கோயிலின் மூல தெய்வம் தண்டீஸ்வரர் - கருணாம்பிகை அம்மன் ஆகும். இந்த கோயிலில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளைக் கொண்டு இந்த கோயில் சோழர் காலத்திலேயே இருந்துள்ளது என்பது அறியப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன், ராஜகேசரி வர்மனின் ஆட்சி காலத்திலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இந்த கோயிலின் சுவற்றில் இடம்பெற்றுள்ளன.
தல வரலாறு என்ன கூறுகிறது
நான்கு வேதங்களும் தங்கள் மீதிருந்த தோஷம் நீங்க ஈஸ்வரனை நோக்கி தவம் இருந்ததாகவும், அவர்களது தவத்திற்கு மனமுருகி ஈஸ்வரன் காட்சி தந்து வேதங்கள் மீதிருந்த தோஷத்தை போக்கியதாகவும் கூறப்படுகிறது. வேதங்கள் மீதான தோஷத்தைப் போக்க ஈஸ்வரனே காட்சி அளித்ததால் இந்த திருத்தலம் வேதஸ்ரேணி என்று பெயர் பெற்றது. இதுதான் நாளடைவில் மறுவி பெயரளவில் வேளச்சேரி என்று தற்போது அழைக்கப்படுகிறது.
திருக்கோயிலின் அமைப்பு
கோயிலின் ராஜ கோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்திற்குள் நுழைந்து உள்ளே சென்றால் வலது புறத்தில் வேத விநாயகர் அமைந்துள்ளார். அவரை வணங்கி விட்டு கருவறையை நோக்கி செல்லும் வழியில் இரு மருங்கிலும் விநாயகரும், முருகனும் வீற்றிருக்கின்றனர்.
அவர்களைக் கடந்து கருவறைக்குள் சென்றால் நம்மை பார்க்கும் விதமாக கருணாம்பிகை அம்மன் வீற்றிருப்பார். கிழக்கு நோக்கிய வண்ணம் மாணிக்க கல்லால் ஆன தண்டீஸ்வரர் அருள் பாலிக்கிறார். ஈஸ்வரனைப் பார்த்தபடி கருவறைக்கு வெளியே நந்தீஸ்வரர் அமர்ந்திருப்பார்.
திருக்கடையூரில் மார்க்கண்டேயனை காத்தருள எம் பெருமான் எமனின் தண்டத்தை பிடுங்கிக் கொண்டதாக புராணம் சொல்கிறது. இத்திருத்தலத்தில் எமனின் தண்டத்தை எம்பெருமான் கொண்டதால் தண்டீஸ்வரர் என்று திருப்பெயர் பெற்றார். இவர் சுயம்பு என்பது குறிப்பிடத்தக்கது.
|