தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழப் பேரரசர் இராஜ இராஜ சோழர் கட்டிய வரலாற்றுப் பெருமைமிக்க தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் பெருவுடையார் கோயிலைப் போன்று, அவரது மகன் இராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டிய பெருவுடையார் கோயிலும் தமிழரின் கட்டடக் கலைக்கு அழகிய சான்றாய் இன்றளவும் அழியாமல் நிற்கிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து 10 கி.மீ. தூரத்திலுள்ளது கங்கை கொண்ட சோழபுரம். கும்பகோணம் செல்லும் பிரதான சாலையிலிருந்து 4 கி.மீ. தூரத்திலுள்ள இக்கோயில், இந்திய தொல்லியல் துறையால் நன்கு பராமரிக்கப்பட்டு தற்பொழுது உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக (யுனிசெஃப்) பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பேரரசர் இராஜ ராஜ சோழருக்குப் பின் அரியணையேறிய இராஜேந்திர சோழர், கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றிக்கொடி நாட்டியது மட்டுமின்றி, வங்கக் கடல் கடந்து கடாரம் (இன்றைய புரூனே/சாரபாக் தீவு) வரை வென்று புகழ் பெற்றவர்.
இப்படிப்பட்ட பெரும் வெற்றிகளுக்குப் பிறகு இராஜேந்திர சோழரின் அரசு, வடக்கே துங்கபத்திரை ஆற்றை எல்லையாகவும், தெற்கே இலங்கைத் தீவை எல்லையாகவும் கொண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது. பரந்துபட்ட பேரரசை உருவாக்கிய இராஜேந்திர சோழர், தனது தலைநகரை தஞ்சையிலிருந்து மாற்றினார். புதிதாக தலைநகரை உருவாக்கினார். அதுவே கங்கை கொண்ட சோழபுரம்.
தனது தந்தை இராஜ ராஜ சோழரைப் போல், பெருவுடையாருக்கு (சிவபெருமான்) கோயில் கட்டி, அதை மையமாகக் கொண்டு தனது தலைநகரை நிர்மாணித்தார்.
கங்கை கொண்ட சோழபுரம் - புகைப்படத் தொகுப்பு!
|