கேரள நாட்டின் எல்லையை ஒட்டி நெடுதுயர்ந்த மலைகளுக்கு இடையே அழகிய இயற்கைச் சூழிலில் பசுமையாய் பரவியிருக்கும் ஒரு சுற்றுலாத் தலம் வால்பாறை.மலைச் சரிவுகளில் இயற்கையாய் அமைந்த படிக்கட்டுகளாய் அடர்த்தியாக பயிரிடப்பட்டிருக்கும் தேயிலைச் செடிகள், தூரத்திலிருந்து பார்ப்பதற்கு மலைகளை பசுமைப் போர்வையால் போர்த்தியிருப்பதைப் போல காட்சியளிக்கும்.எங்கு பார்த்தாலும் தேயிலைத் தோட்டங்கள்தான், அதனால் எத்திசை நோக்கினும் பசுமைதான். எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருக்கும் வால்பாறை, நீலகிரி மலைத் தொடரில் உள்ள கோத்தகிரியைப் போன்று உடல் நல தேற்றத்திற்கு ஏற்ற இடமாகும். வால்பாறைத் தேயிலைக்கு சர்வதேச சந்தையில் அதிக மதிப்புண்டு. இங்கிருந்து தெரியும் அக்காமலை, தங்கச்சி மலைகள் கண்ணிற்கு குளிர்ச்சியானவை. இந்த மலைப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் காணப்படும் அணில்கள் வித்தியாசமான நிறத்தில் மிக கவர்ச்சியாகக் காணப்படுகின்றன. செந்நிறம் கலந்த அழகுடன் திகழ்கின்றன. தனியாக பிரிந்து ஓடிவரும் மான் குட்டிகளை நிறையக் காணலாம். இங்குள்ள ஒரு உயர்ந்த இடத்தில் டாடா தேயிலை நிறுவனம் ஒரு பெருமாள் கோயிலை கட்டியுள்ளது. கோயிலும், அதைச் சுற்றியுள்ள இடமும் நேரத்தை கழிக்கத் தக்கவையாகும். இப்பகுதியில் பயணம் செல்லும் போது ஒரு சிறிய வகை அட்டை ஆங்காங்கு காணப்படும், இது மழைக் காலங்களில் அதிகமிருக்கும். அவைகள் நமது கால்களில் பற்றிக்கொண்டு நாம் அறியாத வகையில் இரத்தை உறிஞ்சி குடித்துவிடும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.யானை படையெடுப்பு அடிக்கடி நிகழக் கூடியது. அதேபோல எப்போதாவது ஒரு முறை சிறுத்தைகளும் வலம் வருவது உண்டு.புறப்படுவோம் டாப் ஸ்லிப் நோக்கி... |