அறிவு என்று பெயர் வைத்தாலும் இயக்குனர் தமிழன் என்னும் உணர்வைதான் அதிகம் நம்பியிருக்கிறார். ரசிகனும் அவரை ஏமாற்றாமல் இலங்கை பற்றிய பேச்சுக்கு திரை அதிர கை தட்டுகிறான். ஆனால் அது மட்டும் போதுமா?
FILE
ஆறாம் நூற்றாண்டு பல்லவ இளவரசரான போதி தர்மர் சீனாவுக்கு செல்கிறார். அவர் செல்லும் கிராமத்தினர் அவரை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்குகிறார்கள். பெயர் தெரியாத வியாதியால் சாகக் கிடக்கும் குழந்தையை போதி தர்மர் சிகிச்சை அளித்து குணப்படுத்த அவரை கடவுளைப் போல் தாங்குகிறது கிராமம். அவர்களுக்கு மருத்துவமும், தற்காப்புக் கலையும் கற்றுக் கொடுக்கிறார் போதி தர்மர். அந்த தற்காப்புக் கலைதான் இன்றைய குங்ஃபூ. போதி தர்மர் தங்களது கிராமத்தை விட்டுச் சென்றால் ஊருக்கு கேடு என்று அவரை விஷம் வைத்துக் கொன்று அங்கேயே புதைக்கிறார்கள்.
போதி தர்மராக மாறுவதற்கு சூர்யா ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார். மேக்கப்பை தாண்டி அவரது உடல்வாகும் போதி தர்மராக அவரை நினைக்க வைக்கிறது. 7 ஆம் அறிவின் ஆகச் சிறந்த பகுதி இது.
அடுத்து நிகழ்காலத்தில் கதை தொடங்குகிறது. அரவிந்த் - சூர்யா சர்க்கஸ் கலைஞன். ஸ்ருதிஹாஸன் - சுபா - டிஎன்ஏ ஆராய்ச்சி மாணவி. ஆறாம் நூற்றாண்டு போதி தர்மரின் வாரிசுகள் இப்போதும் காஞ்சிபுரத்தில் இருக்கிறார்கள். அவர்களின் டிஎன்ஏயை வைத்து போதி தர்மரின் திறமைகளை மீண்டும் கொண்டு வரலாம் என்பது இவரது ஆராய்ச்சியின் மையம். சர்க்கஸ் கலைஞன் சூர்யாதான் போதி தர்மரின் வாரிசு.
இதுஒருபுறம் இருக்க, போதி தர்மர் சீனாவில் குணப்படுத்திய வியாதியை இந்தியாவில் பரப்பி, அந்த மருந்தை சீனா விநியோகித்து, இந்தியா சீனாவை அண்டி இருக்கும்படி செய்ய சீன அரசு டோன்லீ என்பவனை அனுப்புகிறது. அப்படியே ஸ்ருதியையும் போட்டுத் தள்ளச் சொல்கிறது.
WD
ஆறாம் நூற்றாண்டு, அட்டகாச வில்லன், டிஎன்ஏ ஆராய்ச்சி என்று அழகாக புள்ளி வைத்த இயக்குனர் திரைக்கதையை நமத்துப் போன அப்பளமாக்கியதுதான் பிரச்சனை. அதிலும் முதல் பாதி ஆட்டம் பாட்டம் காதல் என்று சவ சவவென நகர்கிறது. புத்துணர்ச்சி தரவேண்டிய பாடல்கள் பூஜை நேரத்து கரடி மாதிரி எசகு பிசகான நேரத்தில் வந்து இம்சை செய்கின்றன. பின்னந்தி மற்றும் யம்மா யம்மா இரண்டும் ரசிப்பதற்கு. இன்னும் என்ன தோழா தமிழ் உணர்வுக்கு. பின்னணி இசையில் குறிப்பாக கிளைமாக்ஸில் காதுகளை சோதிக்கிறார் ஹாரிஸ்.
போதி தர்மராக ரசிக்க வைக்கும் சூர்யா பிறகு சாதா சூர்யாவாகிப் போகிறார். அவர் செய்யும் சர்க்கஸிலும் கிராஃபிக்ஸ் உள்ளேன் அய்யா என்று தலைகாட்டி நெளிய வைக்கிறது. பிளஸ் டூ மாணவி போலிருக்கும் ஸ்ருதிக்கு ஆராய்ச்சி மாணவி வேடம். முருகதாஸுக்கு கான்ஃபிடன்ட் லெவல் அதிகம். ஸ்ருதியும் அவரை ஏமாற்றவில்லை. ஆனால் காதல் கெமிஸ்ட்ரி... அது மட்டும் இருவருக்குள்ளும் நிகழவேயில்லை. கமல் பொண்ணு என்ற ஜாக்கிரதையுடன் சூர்யா நடித்திருப்பாரோ?
படத்தை தூக்கி நிறுத்துவது ஒளிப்பதிவு. ரவி.கே.சந்திரனின் கேமரா யம்மா யம்மா பாடலில் சூர்யாவின் உணர்வை உச்சத்துக்கு கொண்டு செல்கிறது. படத்தின் டெம்போவை கூட்டுகிறார் வில்லனாக வரும் ஜானி, அலட்டாமல் நோக்கு வர்மத்தில் ஒரு நகரையே திணறடிப்பது, போலீஸ் ஸ்டேஷனை காலி செய்வது என்று கமர்ஷியலுக்கு காரம் சேர்க்கிறது இவரது கேரக்டர்.
ஹீரோவைவிட அதிகம் உழைத்திருப்பார் போலிருக்கிறது ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின். படத்தின் ஆரோக்கிய அம்சத்தில் ஆக்சனையும் தாராளமாக சேர்க்கலாம். படம் நெடுக, இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாமே என்று யோசிக்க வைக்கிறார் எடிட்டர். இலங்கையையும், ஈழத்தமிழனையும் குறிப்பிடும் போது முருகதாஸின் பேனா எக்ஸ்ட்ரா எனர்ஜியை காட்டுகிறது. சபாஷ் சார்.
அசத்தலாக தொடங்கி அசமந்தாக தொடர்ந்து ஆறுதலாக முடிகிறது படம். முருகதாஸின் ஓவர் கான்ஃபிடன்டுக்கு விழுந்த ஒரு சின்ன உதைதான் 7 ஆம் அறிவு.