2003 ஆண்டு வெளியான அலெஜான்ரோ கொன்சலஸ் இனாரித்து இயக்கிய 21 கிராம்ஸ் சாயலில் வெளிவந்திருக்கிறது விஷ்ணுவர்தனின் சர்வம்.
ஆர்யா இளம் ஆர்க்கிடெக்ட். அவருக்கு த்ரிஷா மீது கண்டதும் காதல். த்ரிஷா ஒரு டாக்டர். இந்த காதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இந்திரஜித்தையும் அவரது ஆறு வயது மகனையும் வெறியுடன் துரத்துகிறார் ஜே.டி. சக்ரவர்த்தி.
webdunia photo
WD
இந்திரஜித்தின் மகனை கொலை செய்யவே இந்த துரத்தல். சக்ரவர்த்தியின் மனைவியும், மகனும் இந்திரஜித்தின் கவனக் குறைவால் விபத்தில் இறந்து போகிறார்கள். மகனை இழந்த வலியை இந்திரஜித்தும் அனுபவிக்க வேண்டும். அதற்கு அவரது மகனை கொலை செய்ய வேண்டும்.
இந்த இரு வேறு கதையை த்ரிஷாவின் திடீர் மரணம் இணைக்கிறது. த்ரிஷாவின் இதயம் பொருத்தப்பட்ட இந்திரஜித்தின் மகனை சக்ரவர்த்தியிடமிருந்து காப்பாற்றும் பொறுப்பு ஆர்யாவிடம் கை மாறுகிறது. ஆர்யா சக்ரவர்த்தியிடமிருந்து சிறுவனை காப்பாற்றினாரா என்பது கிளைமாக்ஸ்.
படத்தின் நிஜமான ஹீரோ கேமராமேன் நீரவ்ஷா. மூணாறின் குளிர்ச்சியை, அந்த ஜில்லிப்பை திரையரங்கில் உணர முடிகிறது. கிளைமாக்ஸில் வரும் சண்டைக் காட்சியில் ஜாலம் புரிந்திருக்கிறது கேமரா. ஜாலியான வேடம் ஆர்யாவுக்கு. த்ரிஷாவின் மனம் கவர அவர் நடத்தும் திருவிளையாடல்களில் இளமை. அடிக்கடி மரணத்தைப் பற்றி பேசுவது காதல் எபிசோடில் கல்லாக நெருடுகிறது.
அழகாக வந்து அம்சமாக நடித்து இடைவேளையோடு விடைபெறுகிறார் த்ரிஷா. இவ்வளவு சீக்கிரம் அவர் கதையை முடிக்க வேண்டுமா? கொடுத்த காசு வீண் என்று உச் கொட்டுது ரசிக கூட்டம். என் வலி உனக்கு புரியணும் என்ற ஒரு டயலாக்கை வைத்தே நம்மை கொல்கிறார் சக்ரவர்த்தி. மகனின் மரணத்துக்காக பழிவாங்க அலையும் அவரது கதாபாத்திரத்தில் யதார்த்தத்தின் சதவீதம் குறைவு.
சக்ரவர்த்தியிடமிருந்து மகனை காப்பாற்ற ஒவ்வொரு இடமாக ஓடி ஒளியும் இந்திரஜித் தமிழுக்கு கிடைத்திருக்கும் நம்பிக்கையான வரவு. க்ரைம் த்ரில்லர் என்றதும் கருப்பு நாய், கொலை வெறி வில்லன், அடர்ந்த காடு என அரத பழசாக யோசித்தது படத்தின் மிகப் பெரிய பலவீனம். சிறுவனுக்கு என்னாகுமோ என்ற திக் திக் நிமிடங்களில், ஆர்யாவும் அவனும் போட்டுக் கொள்ளும் செல்லச் சண்டைகள் ஆச்சரியம். எப்படி அனுமதித்தார் இயக்குனர்?
சக்ரவர்த்தியிடமிருந்து தப்பித்து மருத்துவமனைக்கு வந்த பிறகும் போலீஸிடம் செல்லாமல் மீண்டும் ஆர்யா சிறுவனுடன் காட்டுக்குள் புகுந்து கொள்வது ஏனோ? அந்த பாழடைந்த சர்ச்சில் பளிச்சிடுகிறது கலை இயக்குனரின் திறமை. தனித்து கேட்கும் போது யுவனின் பாடல்களில் இருக்கும் சுவாரஸியம் படத்தில் பார்க்கும்போது இல்லை. பின்னணி இசை பரவாயில்லை.
ஆர்யா யார்? அவருக்கு சொந்தங்கள் கிடையாதா? அதேபோல் இந்திரஜித்துக்கு? பின்னணி இல்லாத இந்த கதாபாத்திரங்கள் கதையுடனான ஈடுபாட்டை குறைக்கின்றன. விஷ்ணுவர்தனின் க்ரைம் த்ரில்லரில் க்ரைமும் குறைவு த்ரில்லும் குறைவு.